புத்தாண்டு கொண்டாட்டம்: காவல்துறையின் 14 கட்டுப்பாடுகள்!

சனி, 30 டிசம்பர் 2017 (17:31 IST)
உலகம் முழுவதும் புத்தாண்டு தயாரிப்புகள் நடந்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் பெரு நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடந்து அதனை சீர்குலைக்கின்றன. இதனை தடுக்க சென்னையில் காவல்துறை அதிரடியில் இறங்கியுள்ளது.
 
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்புகள் போன்றவற்றக்கு காவல்துறை 14 நிபந்தனைகளை விதித்துள்ளது. இதனை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என எச்சரித்துள்ளது.
 
காவல்துறையின் 14 நிபந்தனைகள்:
 
1. பொழுதுபோக்கு இடங்களில் புத்தாண்டை கொண்டாட அனுமதி கோரி விண்ணப்பிப்போருக்கு 31.12.2017 மாலை 6 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை சிறப்பு உரிமம் வழங்கப்படும். நள்ளிரவு 1 மணியுடன் நட்சத்திர ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் உணவு வழங்குதல் மற்றும் மதுபான விற்பனையை நிறுத்திக் கொள்வதுடன் கொண்டாட்டங்களையும் முடித்துக்கொள்ள வேண்டும்.
 
2. நட்சத்திர ஹோட்டல், உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகளுக்கு வரும் வாகனங்கள் முறையாகச் சோதனை செய்யப்பட வேண்டும். அனைத்து நுழைவு வாயில்களிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு வாகனங்களின் விபரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.
 
3. அனுமதி வழங்கப்பட்டுள்ள இடங்களைத் தவிர மற்ற இங்களில் மதுவகைகளைப் பரிமாறக் கூடாது.
 
4. நீச்சல் குளத்தின்மீதோ அதன் அருகிலோ தற்காலிக மேடைகள் அமைத்தல் கூடாது.
 
5. கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காகத் தற்காலிக மேடைகள் அமைக்கப்படும்பட்சத்தில் மேடையின் உறுதித்தன்மையை உறுதி செய்யும் வண்ணம் சம்பந்தப்பட்ட துறைகளிலிருந்து தகுதிச் சான்றிதழ் பெறப்பட வேண்டும்.
 
6. நீச்சல் குளங்களை 31.12.2017 அன்று மாலை 6 மணி முதல் 1.1.2018 காலை 6 மணி வரை மூடி வைத்திருக்க வேண்டும்.
 
7. விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களின் விபரங்களைச் சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகம் சரிபாக்க வேண்டும்.
 
8. கேளிக்கை நிகழ்ச்சிகள் நடக்கும் அறையில் ஈவ்டீசிங் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஹோட்டல் நிர்வாகத்தினர் போதிய பணியாளர்களை நியமித்து கண்காணிக்க வேண்டும்.
 
9. நீச்சல் குளத்துக்குச் செல்லும் வழிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்புத் தடைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
 
10. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கும் கூடுதலாக விருந்தினர்களை நிர்வாகிகள் உள்ளே அனுமதிக்க கூடாது.
 
11. மதுஅருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். மதுஅருந்திவிட்டு வெளியே வரும் விருந்தினர்களை மாற்று வாகனம் மூலும் அனுப்பி வைக்க நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
 
12. குடிபோதையில் அத்துமீறல் செயல்களில் ஈடுபடுபவர்களை விடுதி நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்துதல் வேண்டும்.
 
13. நிர்வாகத்தினர் கேளிக்கை நிகழ்ச்சிகள் மிகுந்த நாகரிகத்துடனும் கண்ணியத்துடனும் நடத்துவதற்குத் தேவையாக முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
 
14. விதிமுறைகளை மீறும் விடுதி நிர்வாகத்தினர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்