மாற்றுத்திறனாளியை பெட்ரோல் ஊற்றி கொன்றுவிடுவதாக மிரட்டிய காவல் ஆய்வாளர்

ஞாயிறு, 20 மார்ச் 2016 (15:42 IST)
கோவையில், காவல் ஆய்வாளர் ஒருவர் மாற்றுத்திறனாளி நபரை பெட்ரோல் ஊற்றி துடிக்க துடிக்க கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார்.
 

 
கோவை வெள்ளகிணறு பகுதியை சேர்ந்த மாற்றுத் திறனாளி மாரியப்பன் இவர் 90 % ஊனமுற்றவர். இவர் தனது வாழ்வாதாரத்திற்காக ஆவின் பலகம் நடத்த விண்ணப்பித்தார். ஆவினில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பாலகம் நடத்த இடம் ஒதுக்கி தந்தனர்.
 
ஆவின் பாலகத்திற்கான இடத்திற்கு கோவை மாநகராட்சி, காவல்துறையில் தடையின்மை சான்றும் பெற்றுவிட்டார்.
 
இந்நிலையில் நேற்று மாரியப்பன் ஆவின் பாலகத்திற்கான பெட்டியை நிறுவிவிட்டார். அவர் பெட்டி அமைத்து அனுமதி தந்த இடத்திலிருந்து சுமார் 100 மீ தொலைவில். அந்த இடத்திற்கு வந்த சி-2 ரேஸ்கோர்ஸ் காவல்நிலைய ஆய்வாளர் செல்வராஜ். மாரியப்பனின் ஊடல் குறைபாட்டை சொல்லி திட்டியுள்ளார்.
 

 
மேலும், ‘ஆவின் பால் பெட்டியை தூக்குடா.... உனக்கு எவண்டா இங்க கடை போட பர்மிசன் கொடுத்தது. நான் திருநெல்வேலி காரன். என்ன மீறி ரேஸ்கோர்ஸ்ல கட போட்டு போழச்சிடுவியா?
 
ஒனக்கு பால் பூத் வெக்க அனுமதி தரலைனா தீ குளிப்பியா. என் காசிலேயே பெட்ரோல் வாங்கி உன்ன எரிகிறேனா இல்லயா பாரு. எனக்கு வேல போனாலும் பரவல்ல உன்ன முடிக்காம விட மாட்டேன். கொஞ்ச நேரத்துல உன் ஆவின் பால் லாரி விட்டு ஏத்துறேன் பாரு.
 
இந்தமாசம் என் ஸ்டேசன் பெண்டிங் கேஸ் எல்லாம் உனக்குதான்" என்றெல்லாம் திட்டியிருகிறார்.
 
உழைத்து பிழைக்க நினைக்கும் மாற்றுத் திறனாளியை இப்படி மிரட்டுவது எவ்வளவு கேவலமான செயல் என்றும், அரசு இந்த விசயத்தில் தலையிட்டு உரிய நீதி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சி.ஆனந்த்குமார்

வெப்துனியாவைப் படிக்கவும்