சசிகலா மீண்டும் அதிமுகவுக்கு திரும்புவது குறித்து சட்டத்துறை அமைச்சர் சி வி சண்முகம் ஊடகங்களிடம் பேசியிருந்தார். அதில் இருந்து அவரது செல்போன் எண்ணுக்கு ஆபாசமான வசைகளோடு மிரட்டல்களும் அழைப்புகளும் வருவதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரில் கடந்த ஜூன் 7ஆம் தேதி சசிகலா குறித்து சில கருத்துகளை ஊடகங்களிடம் பேட்டியாகக் கொடுத்தேன். அதற்கு சசிகலா நேரடியாகப் பதிலளிக்காமல், அடியாட்களை வைத்து கைப்பேசி மற்றும் சமூக ஊடகங்களான வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டர் மூலம் ஆபாசமாகவும், அநாகரிகமாகவும் பேசியும், பதிவிட்டும் வருகிறார்கள். மேலும், கைப்பேசியில் என்னை அச்சுறுத்தும் வகையில், கொலை மிரட்டல் விடுத்தும் வருகின்றனர். இன்றுவரை சுமார் 500 போன் அழைப்புகள் செய்துள்ளனர். இன்னும் கைப்பேசி, சமூக ஊடகங்கள் மூலம் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். சசிகலா பற்றிப் பேசினால் உன்னையும், உன் குடும்பத்தையும் தொலைத்துவிடுவோம் என மிரட்டும் தொனியில் பேசுகின்றனர். இதற்கு சசிகலாவின் தூண்டுதல்தான் காரணம். எனவே சசிகலா மற்றும் எனது அலைப்பேசிக்குக் கால் செய்த மர்ம நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.