உங்கள் புகாரின் மீது காவல்துறை நடவடிக்கை இல்லையா? - ‘ஹலோ போலீசை’ அழையுங்கள்

சனி, 28 நவம்பர் 2015 (17:33 IST)
காவல்துறையினர் உங்கள் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ‘ஹலோ போலீசை’ அழைத்து உங்கள் புகாரை தெரிவிக்கலாம்.
 

 
விருதுநகர் மாவட்டத்தில் இந்த “ஹலோ போலீஸ்“ குறித்து அறிவிக்கப்பட்டு உள்ளதோடு புதிய அலை பேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் கூறுகையில், ”நகர் பகுதியில் வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்க “ஹலோ போலீஸ்” என்ற புதியஅலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
 
குற்றங்களை தடுக்க வேண்டுமெனில் பொது மக்களின் ஒத்துழைப்பும் முக்கியமாகும். 91500 11000 என்ற எண்ணுக்கு 24 மணி நேரமும் தகவல் தெரிவிக்கலாம்.
 
காவல் நிலையங்களில் புகார் செய்து நடவடிக்கை எடுக்க மறுத்தால் மேற்கண்ட எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். இந்த எண்ணுக்கு தகவல் தெரிவிப்பவரின் விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
 
புகார்தாரருக்கும் அதுபற்றிய தகவல் தெரிவிக்கப்படும். ரவுடியிசத்தை முற்றிலும் ஒழிக்க இந்த எண் பிரதானமாக பயன்படுத்தப்படும். இதற்கென ஒரு சார்பு ஆய்வாளர் தலைமையில் தனிக் குழு அமைக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்