சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இருந்த சௌந்தர்ராஜன் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுள்ளார். அந்த சமயம் பூட்டியிருந்த வீட்டை உடைத்த ஆசாமி ஒருவர் அங்கிருந்த டிவி, நகைகள், பைக் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து சௌந்தர்ராஜன் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து சௌந்தர்ராஜனின் வீட்டில் போலீஸார் சோதனை மேற்கொண்டபோது வீட்டின் சுவற்றில் “விஷ்ணு” என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் ஒத்த செருப்பு ஒன்றும் அங்கு கிடைத்துள்ளது. இந்நிலையில் செம்மஞ்சேரியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது ஒத்த செருப்புடன் இருசக்கர வாகனத்தில் வந்த மதன் என்பவர் போலீசாரிடம் தாறுமாறாக பேசியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் மது குடிக்க பணம் இல்லாததால் தனது நண்பருடன் சேர்ந்து சௌந்தர்ராஜன் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் சுவற்றில் தனது மகன் விஷ்ணு பெயரை மதன் எழுதியதும் தெரிய வந்துள்ளது.