நமக்கான வாகனம் அருகில் வந்துவிட்டது!.. கூட்டணியை அறிவிக்கும் ராமதாஸ்..

Mahendran

புதன், 25 பிப்ரவரி 2026 (12:30 IST)
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் ராமதாஸ் தலைமையிலான பாமக மட்டுமே இதுவரை எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை. பாமக தற்போது இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது அதில் அன்புமணி தலைமையிலான பாமக ஏற்கனவே அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்துவிட்டது. எனவே ராமதாஸ் அந்த கூட்டணிக்கு செல்ல முடியாது. அதேபோல் திமுகவில் விடுதலை சிறுத்தை இருப்பதால் அந்த கட்சிக்கும் செல்ல முடியாது.. எனவே ராமதாஸ் விஜயின் தவெகவுடன் கூட்டணி வைப்பார் என பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் இப்போது வரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை..

இந்நிலையில்தான், யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி விவாதிக்க வன்னியர் சங்க நிர்வாகிகளுடன் டாக்டர் ராமதாஸ் இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வன்னியர் சங்க மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் ஆகியோர் பங்கு பெறுகிறார்கள். தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 10 மணிக்கு ராமதாஸின் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது
. அனேகமாக இந்த கூட்டம் முடிந்தபின் கூட்டணியா இல்லை தனித்துப் போட்டியா என ராமதாஸ் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கூட்டணி பற்றிய அறிவிப்பு நாளைக்கு வெளியாகும் எனத்தெரிகிறது.

தற்போது ராமதாஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் ‘நாம் சற்றே நம் கடந்த காலத்தை திரும்பி பார்ப்போம். சமூகநீதி வரலாற்றில் தமிழ்நாட்டளவில் 4 இட ஒதுக்கீடுகள், தேசிய அளவில் 2 இட ஒதுக்கீடுகள் என மொத்தம் 6 இட ஒதுக்கீடுகளை நாம் தான் போராடி வென்றெடுத்தோம். சாதி, சமய, ஒற்றுமையுடன் அனைவரும் சகோதரர்களாக வாழ வேண்டி சமய சமுதாய நல்லிணக்க மாநாடுகளை நடத்தினோம்.

இன்னும் வெல்ல வேண்டியவை பெண்களுக்கான சம உரிமை, போதை இல்லா தமிழகம், ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஒரே மாதிரி கல்வி, ஒரே மாதிரி தரமான மருத்துவம், வேலைவாய்ப்பு, அனைவருக்கும் சொந்த வீடு, அனைவருக்குமான பொருளாதார முன்னேற்றம், விவசாயிகளை ஊக்கப்படுத்தி நஞ்சில்லா உணவு உற்பத்தி,நெரிசலற்ற போக்குவரத்திற்கான சாலைகள், பண வீக்கமற்ற பொருளாதார வளர்ச்சி, வன்முறை இல்லா பாதுகாப்பான வாழ்க்கை என ஏராளமான இலக்குகள் உள்ளன.

நம் பலம் அப்படியேதான் உள்ளது. உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்ற கவியரசர் கண்ணதாசன் பாடல் வரிகளுக்கேற்ப, நம்மை நாம் அறிந்து போராடி நமக்கான இலக்கை அடைவோம். சோர்வு என்பது நம் அகராதியிலே இல்லை...

உங்கள் மனதளவில் சிறு கலக்கம் ஏற்பட்டுள்ளதை நான் அறிவேன். நாம் பயணிக்கவேண்டிய தூரம் நீண்டது. அதனால் கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடையவே முடியாது. நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்துவிட்டது. அதில்தான் பயணிக்கப்போகிறோம். நம் இலக்கை அடைந்து இலட்சியத்தை வெல்வோம்’ என்று அதில் அவர் கூறியிருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்