நீட் சமூக நீதிக்கு தீங்கு; ஆனால் தற்கொலை தீர்வல்ல! – ராமதாஸ் கருத்து!

ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (14:29 IST)
நீட் தேர்வு பயத்தால் மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இன்று நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நீட் தேர்வு அச்சம் காரணமாக தனுஷ் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “மேட்டூரை அடுத்த கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் நீட் அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது இந்த முடிவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் “நீட் தேர்வு சமூக நீதிக்கு தீங்கானது. அது உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். அதேநேரத்தில் இந்தப் பிரச்சினைக்கு தற்கொலை தீர்வு அல்ல. மாணவச் செல்வங்களின் உயிர் விலைமதிப்பற்றது. வாழ்ந்து சாதிக்க வேண்டிய அவர்கள் தவறான முடிவை எடுக்கக்கூடாது! மாணவர்கள் தங்களின் உயர்கல்வி குறித்த பார்வையை விசாலப்படுத்த வேண்டும். மருத்துவம் மட்டுமே உயர்கல்வி அல்ல. அதை விட சிறந்த, வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய படிப்புகள் பல உள்ளன. அவற்றின் மீதும் கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்