நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக-காங்கிரஸ்-விசிக-மதிமுக-இடது சாரிகள் அடங்கியப் பலமானக் கூட்டணி உருவாகியுள்ளது. அதுபோல அதிமுக-பாஜக-பாமக-தேமுதிக அடங்கியக் கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் பாமக அதிமுக கூட்டணியை விட வலுவான திமுக கூட்டணியில் சேரவே முதலில் ஆர்வம் காட்டியது. ஆனால் அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் பாமகவை அணியில் இணைப்பது குறித்து பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருந்தார். அதற்குக் கூட்டணியில் உள்ள திருமாவளவன் உள்ளிட்ட சிலக் கட்சிகளின் தலைவர்களின் அழுத்தமேக் காரணமாகக் கூறப்படுகிறது.
அதன் பிறகே ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மற்றும் காங்கிரஸின் புதிய செயல்தலைவர் விஷ்ணு பிரசாத் ஆகியோர் மூலம் மீண்டும் பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸோடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் பாமக தலைவர் ராமதாஸ் அதிமுக கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிப்பங்கீடு மற்றும் தேர்தல் நிதி ஆகியவற்றை இறுதி செய்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்போது திமுகவுடனான அன்புமணியின் கூட்டணிப் பேச்சுவார்த்தை ராமதாஸுக்கு திருப்தி அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.