எஸ்.ஆர்.எம். குழும தலைவர் பாரிவேந்தர் மீது பாமக வழக்கு
திங்கள், 13 ஜூன் 2016 (12:14 IST)
எஸ்.ஆர்.எம். குழும தலைவர் பாரிவேந்தர் மீது, பாமக சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர், தனது மகனுக்கு மருத்துவ சீட் வாங்கித் தருவதாகக் கூறி வேந்தர் மூவிஸ் நிறுவனர் மதன் 52 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளித்திருந்தார்.
இதனையடுத்து மதன் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாயமானார். அவர் எழுதியுள்ளதாக கடிதம் வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மதன் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் தலைவர் பாரிவேந்தர் எனப்படும் டி.ஆர்.பச்சமுத்துக்கு நெருக்கமாக இருந்தவர் என்ற வகையில் அவர் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
வேந்தர் மூவிஸ் மதன் காணாமல் போன விவகாரத்திலும், எஸ்.ஆர்.எம். கல்லூரியில் பல கோடி ரூபாய் மோசடி பண பரிவர்த்தனை விவகாரத்திலும், பாரிவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.
அதன் பின்னர், ’கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு, திண்டிவனத்தில் சாதாரண டாக்டராக தொழில் செய்து வந்த ராமதாஸ், இன்று பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாகவும் - பல்வேறு அறக்கட்டளைகளை நிர்வகிப்பவராகவும் இருப்பது எப்படி என்பதை கூறமுடியுமா?
ஆயிரக்கணக்கான அப்பாவி வன்னியர்களின் கூட்டு முயற்சியால் கட்டப்பட்ட கல்லூரியை தன் குடும்ப சொத்தாக மாற்றிக்கொண்டார்’ என்று பச்சமுத்து குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், கடந்த 11ஆம் தேதி பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவதூறு பரப்பியதாக எஸ்ஆர்எம் குழும தலைவர் பாரிவேந்தர் மீது, பாமக சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை ஜார்ஜ் டவுன் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.