எனது கணவரை என்னிடம் ஒப்படையுங்கள்! - மாமனார் வீடு முன்பு இளம்பெண் போராட்டம்

புதன், 28 டிசம்பர் 2016 (01:29 IST)
தனது கணவரை ஒப்படைக்கும் வேண்டும் என்று மாமனார் வீடு முன்பு இளம்பெண் போராட்டம் நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


 

திண்டுக்கல் சாணார்பட்டியை சேர்ந்த துரைப்பாண்டி மகன் நிர்மல்ராஜ்(26) மதுரை தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். அதேபோல், திண்டுக்கல் கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் கணேசன் மகள் கார்த்திகா(26) நத்தம் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இது காதலாகி மாறியுள்ளது. இந்நிலையில், கார்த்திகா கடந்த ஆண்டு நிர்மல்ராஜ் திருமண ஆசை காட்டி தன்னை ஏமாற்றி விட்டதாக திண்டுக்கல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, நிர்மல்ராஜை காவல் துறையினர் விசாரித்து, பிறகு சமாதானம் பேசி 2015 டிசம்பர் மாதம் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இதனை நிர்மல்ராஜ் பெற்றோர் ஏற்கவில்லை என்று தெரிய வருகிறது.

அதற்குப் பிறகு நிர்மல்ராஜ், தனது மனைவியுடன் அவரது வீட்டிலேயே தங்கி வந்துள்ளார். தனது பெற்றோரை பார்ப்பதற்கு, அவ்வப்போது சாணார்பட்டி சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் வீட்டுக்கு சென்ற நிர்மல்ராஜ் திரும்பி வராமல் இருந்துள்ளார். கார்த்திகா எவ்வளவோ முயற்சித்தும் நிர்மால்ராஜை சந்திக்கவோ, தொடர்பு கொள்ளவோ இயலவில்லை.

இதனையடுத்து கார்த்திகா சாணார்பட்டியில் உள்ள மாமனார் வீட்டு முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், மகளிர் காவல் துறையினர் கார்த்திகாவை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். அதன் பின்னர் போராட்டத்தை கார்த்திகா கைவிட்டுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்