எங்களை தொந்தரவு செய்யாமல் செய்யுங்கள் : மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

வியாழன், 6 செப்டம்பர் 2018 (13:07 IST)
அழகிரி நடத்திய பேரணி, அவரை தமிழக அரசியலில் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது என, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் விவரம்:
 
கர்நாடக அரசு காவிரியிலிருந்து தமிழகத்துக்கு அதிகமான தண்ணீர் திறந்து விட்டுள்ளதே?

கர்நாடக அரசு இப்போது ஏன் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டனர்? தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பதற்காகவா திறந்து விட்டர்கள்? அணை உடைந்து தங்களது பகுதியில் வெள்ளம் ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தில் திறந்து விடப்பட்டது. பாசனத்திற்காக தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசு நினைக்கவில்லை. அதற்காகத் தான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இனி சரியான முறையில் நடக்கும்.
 
தமிழகத்தில் சரியான முறையில் ஆட்சி நடக்கிறதா?
 
தமிழகத்தில் எப்படி ஆட்சி நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
 
ரபேல் விமான விவகாரத்தில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளதே?
 
இதுகுறித்து ராகுல் குற்றச்சாட்டு எழுப்பிய அன்றே பிரான்ஸ் அரசாங்கம் விளக்கம் 
கொடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் விமானங்களின் விலை குறித்த விஷயங்கள் 2016-ம் 
ஆண்டே அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை. 
இரு நாடுகளுக்கிடையேயான விஷயத்தில் சில விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டும்.
அந்த விதிகளை கடைபிடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
 
சோபியா விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டிருக்க தேவையில்லை என சில
கட்சிகள் குற்றம்சாட்டுகிறதே?
 
விமானத்தில் வரும்போது அதற்கென உள்ள விதிமுறைகளை பின்பற்ற  வேண்டும். யாராக இருந்தாலும் அதை கடைபிடிக்க வேண்டிய கட்டாயம்  இருக்கிறது. விமர்சனம் கூடாது என சொல்லவில்லை, தாராளமாக விமர்சனம் செய்யுங்கள். எங்களை தொந்தரவு செய்யாமல் செய்யுங்கள்.
 
திமுக ஒழிக என திமுக தலைவர்களே பேரணி நடத்தியிருக்கின்றனர். அதைப்பற்றி அவர்கள் கவலைக் கொள்ளட்டும். பாஜக ஒழிக என திமுக தலைவர் சொன்னால் என்ன, சொல்லாவிட்டால் என்ன? அழகிரியின் பேரணி மிகப்பெரிய மாற்றத்திற்கு வழி வகுத்திருக்கிறது  என நான் நினைக்கிறேன்.  இதுபற்றி திமுக கவலை கொள்ளட்டும்.
 
அழகிரியை பாஜக இயக்குகிறதா?
 
அழகிரி திமுகவின் மூத்த தலைவர்களுள் ஒருவர். அவரை கட்சியிலிருந்து நீக்குவதும் நீக்காமல் இருப்பதும் உட்கட்சி விவகாரம். புதன்கிழமை அழகிரி நடத்தி காட்டிய ஊர்வலம் சாதாரண ஒன்றல்ல, தமிழக அரசியலில் அவரை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்