பெரம்பலூரில் கவுன்சிலர் கொலை செய்யப்பட்டது பற்றிய பரபரப்புத் தகவல்கள்

புதன், 16 ஜூலை 2014 (17:11 IST)
பெரம்பலூர் கவுன்சிலர் கொலை மற்றும் பெண் கவுன்சிலர் தற்கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெரம்பலூர் நகராட்சியின் 8 ஆவது வார்டு கவுன்சிலராக இருந்த தீபா, தேமுதிக கட்சி உறுப்பினராக இருந்தவர். பின்னர் உள்ளாட்சி தேர்தலில் அப்பகுதி அதிமுக பிரமுகர் ஒருவர் ஆதரவுடன் அதிமுகவுக்குத் தாவி 8 ஆவது வார்டில் கவுன்சிலராக போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

பின்னர் கவுன்சிலராக பொறுப்பேற்ற தீபாவிற்கு முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் என ஆதரவு வட்டம் பெருகியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் திமுக வின் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 11 ஆவது வார்டு கவுன்சிலர் வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் கந்தசாமி மகன் அன்பு முத்துவிற்கும், தீபாவிற்கும் தொடர்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இதனால் தீபாவிற்கும் அவரது கணவர் மயில்சாமிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிவு ஏற்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் புலியூரை சேர்ந்தவர் மயில்சாமி. ஏற்கனவே திருமணமான இவர் மீது கரூர் மாவட்டத்தில் பல வழக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பெரம்பலூருக்கு வந்த மயில்சாமி அங்கு எலக்டீரிசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். அவர் கரூரில் இருந்த போது அங்கு ஒரு டெக்ஸ்டைல் மில்லில் வேலை செய்து வந்த போதுதான் தீபாவுடன் மயில்சாமிக்கும் காதல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தீபாவிற்குப் பெரம்பலூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவருடன் திருமணம் ஆகி இருந்த நிலையில் தான் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இதன் பின்னர் கவுன்சிலரான தீபாவின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்ததால் அவரை விட்டு மயில்சாமி பிரிந்ததாக கூறப்படுகிறது.

தீபாவை பற்றிய செய்திகளை கேட்டு மனவேதனையில் இருந்து வந்த மயில்சாமிக்கு கவுன்சிலர் அன்பு முத்துவுடனும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டதும், இருவரும் அடிக்கடி வீட்டில் உல்லாசமாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் இருவரையும் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் தீபாவை சந்திக்க அன்பு முத்து வந்தபோது மயில்சாமி இருவரையும் கொலை செய்யும் நோக்கத்துடன் அங்கு அரிவாளுடன் சென்றுள்ளார்.

தீபாவின் வீட்டில் அன்பு முத்து இருப்பதைப் பார்த்த ஆத்திரத்தில் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதைப்பார்த்த தீபா இருகிலிருந்த அறைக்குள் சென்று கதவைப் பூட்டியுள்ளார்.

பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சி பெரம்பலூர் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்