ஜெ.வுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை போல மக்கள் மன்றமும் வழங்கும் - வைகோ ஆவேசம்

வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (16:43 IST)
உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பைப் போன்று சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் மன்றமும் ஜெயலலிதாவுக்குத் தக்க தண்டனை வழங்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
 

 
2015 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்ததாகக் கூறி, தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் சந்திரகுமார், மோகன் ராஜ், பார்த்திபன், சேகர், வெங்கடேசன், மற்றும் தினகரன் ஆகிய 6 பேரை கூட்டத்தொடர் முழுவதும் நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
 
இந்த உத்தரவை எதிர்த்து தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
 
அந்த மனுவில், தங்களை இடைநீக்கம் செய்திருப்பதால், தொகுதி மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியிருந்தனர். இதனால், இந்த இடைநீக்க உத்தரவை ரத்து செய்யுமாறு, சபாநாயகருக்கு ஆணையிட வேண்டும் எனவும் கோரியிருந்தனர்.
 
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை முடிவில் உச்சநீதிமன்றம், “எம்.எல்.ஏ.க்களின் இடைநீக்கத்தில் வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை” என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
 
’’தமிழ்நாடு சட்டமன்றத்தில் இருந்து தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பேரவை தலைவரால் இடைநீக்கம் செய்யப்பட்டதை இரத்து செய்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கதக்கதாகும். ஜனநாகயத்திற்கு கிடைத்த வெற்றி ஆகும்.
 
சட்டமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்ததில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன என்றும், சட்டமன்ற உறுப்பினர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளனர்.
 
சட்டமன்றத்தில் ஜனநாயகப் படுகொலை நடத்தியதற்கும், ஆளுங்கட்சியினர் எதேச்சதி காரத் திற்கும்,  உச்சநீதிமன்றம் சரியான சவுக்கடி கொடுத்து இருக்கின்றது. 
 
கடந்த நான்கரை ஆண்டுக்காலமாக, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரலைக் கடுமையாக  ஒடுக்கி, ஆளுங்கட்சியினர் நடத்திய ஜனநாயக விரோதச் செயல்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அணுகுமுறையே காரணம் ஆகும்.
 
தற்போது உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பைப் போன்று நடைபெற இருக்கின்ற சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் மன்றமும் ஜெயலலிதாவுக்குத் தக்க தண்டனை வழங்கும் என்று தெரிவித்துக் கொள்கின்றேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்