உயிருக்கு போராடியவர்களை செல்போனில் படம் எடுக்க ஆர்வம் காட்டிய மக்கள்

வியாழன், 28 ஜூலை 2016 (16:02 IST)
வாழப்பாடி அருகே ஏற்பட்ட விபத்தில் உயிருக்கு போராடிய இளைஞர்களை பொதுமக்கள் செல்போனில் படம் எடுக்க ஆர்வம் காட்டியதால் 3 பேர் உயிர் இழந்தள்ளனர்.


 


சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள புழுதிக்குட்டை புதுக்காடை பகுதியை சேர்ந்த டிரைவர் ரமேஷ் (24) நேற்று முன்தினம் தனது நண்பர் வெங்கடேஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பேளூர் நோக்கி சென்றார். மோட்டார் சைக்கிள் ஏரிகோழிக்கரையில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 மோட்டார் சைக்கிளில் சென்ற 4 வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். மற்ற மூவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.இதைபார்த்த அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடியவர்களை யாரும் மருத்துவமனையில் சேர்க்கவோ, அவசர ஊர்திக்கு தகவல் தெரிவிக்கவோ முன்வரவில்லை. உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தவர்களை செல்போனில் புகைபடம் எடுத்து கொண்டிருந்தனர். இதற்கிடையே தகவல் அறிந்து அரை மணி நேரத்திற்கு பின்னர் அங்கு வந்த காவல்துறையினர், மோட்டார் சைக்கிள்களுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெங்கடேஷ், சின்னகுட்டி மடுவை சேர்ந்த மைக்கேல்ராஜ் (21), சின்னவேலம்படுவை சேர்ந்த சத்தியராஜ் (21) ஆகிய 3 வாலிபர்களையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மைக்கேல்ராஜ், சத்யராஜ் ஆகிய 2 பேரும் இறந்தனர். வெங்கடேஷ் மட்டும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்