பழனி கோவிலில் தமிழில் குடமுழுக்கு! – அமைச்சர் அறிவிப்பிற்கு வரவேற்பு!

வெள்ளி, 20 ஜனவரி 2023 (13:03 IST)
பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள முருக பெருமானின் அறுபடை வீடுகளில் பிரசித்து பெற்றது பழனி. கடந்த 13 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பழனி கோவில் குடமுழுக்கிற்காக புணரமைக்கப்பட்டு வருகிறது. அனைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில் ஜனவரி 27ம் தேதி சஷ்டி அன்று குடமுழுக்கு நடைபெற உள்ளது.

குடமுழுக்கை காண பக்தர்கள் ஏராளமாக வருவர் என்பதால் 2 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது. குடமுழுக்கு அனுமதி பெற விரும்புபவர் அறநிலையத்துறை வலைதளத்தில் சென்று பதிவு செய்துகொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் குடமுழுக்கு குறித்து பேசியுள்ள இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு “பழனி முருகன் கோவிலில் ஆகம விதிகளுக்கு உட்பட்டு தமிழில் மந்திரங்கள் ஓத நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படும். பழனி முருகன் கோவில் பெரும் பொருட்செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளார்.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்