ஜெயலலிதாவை மறைமுகமாக விமர்சித்த பழ.கருப்பையா: திருப்பூர் கூட்டத்தில் பேச்சு

செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (15:58 IST)
அதிமுக-வில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட பழ.கருப்பையா, ஊடகங்களுக்கு பேட்டியளித்ததின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். சமீபத்தில் தந்தி தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தின் போது நெறியாளர் ரங்கராஜ் பாண்டேவுடன் சண்டையிட்டு நிகழ்ச்சியின் பாதியிலேயே சென்று விட்டார்.
 
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், ஆளும் கட்சியான அதிமுக-வுக்கும் எதிராக இவர் பேசி வருவதால், இவர் மீதான ஊடகங்களின் பார்வையும் திடீரென அதிகரித்தது. இவர் ஊடகங்களுக்கு பேட்டியளித்ததையடுத்து இவரது வீடு மர்ம நபர்களால் தாக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.
 
எந்தவிதமான கருத்துக்களையும், சமரசம் இல்லாமல், சற்று கிண்டலும், காமெடியுமாக பேசுபவர் பழ.கருப்பையா. இவர் திருப்பூரில் கம்யூனிஸ்ட் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த புத்தக கண்காட்சியில் கலந்துகொண்டு பேசினார்.
 
இந்த புத்தக கண்காட்சியில் பேசிய பழ.கருப்பையா, அதிமுக அமைச்சர்களையும், முதல்வர் ஜெயலலிதாவையும் மறைமுகமாக தாக்கி பேசினார். கூட்டத்தில் பேசிய அவர், மறைமுகமாக ஜெயலலிதாவை ஹிட்லருடன் ஒப்பிட்டு பேசினார்.
 
ஹிட்லரை விட வலிமையானவர்களா நம் தலைவர்கள்? அவனைப்போல கொடியவனை வரலாறு சந்தித்தது இல்லை. மிக கொடியவன். ஒரு பெண்ணை மணந்து கொண்டால் அவர் நமக்கு சமமாகி விடுவார் என எண்ணி யாரையும் மணந்து கொள்ளாமல் வாழ்ந்தவன். அவ்வளவு கொடிய ஹிட்லர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்தான்.
 
எதிரிகள் என் உடலை இழிவுபடுத்தி விடுவார்கள் என்பதால் தான் இறந்து உடன் என் உடலை எரித்து விடுங்கள் என சொன்னவன் ஹிட்லர். உலகத்தின் மோசமான மனிதரை எல்லாம் அறம் தண்டித்தே தீரும் என்பதை நாம் பார்க்கிறோம். உச்சிப்பொழுதில் உன்னுடைய நிழல் காலுக்கு கீழ் சில சமயங்கள் ஒடுங்கி விடும். அதற்காக நிழல் இல்லாமல் போய்விட்டது என மகிழாதே.
 
மாலையில் நீண்டு வரும் நிழலைப்போல நீ செய்த வினைக்குரிய பலன் சில சமயம் உன் கண்ணுக்கு தெரியாதே தவிர, மாலை பொழுதில் நீண்டு வரும் நிழலைப்போல நீ செய்த வினை உன்னை சாடாமல் விடாது என்றார்.
 
மேலும், இன்று சுய சிந்தனை இல்லாதவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்படுகின்றனர். இதற்கு காரணம், அவர்கள் அமைச்சர்களாக அல்ல கலெக்‌ஷன் ஏஜென்டாக மாற்றப்பட்டிருப்பது தான். கட்டட அனுமதிக்கு முன்னர் சதுர அடிக்கு ரூ.6, ரூ.8 என இருந்த லஞ்சம் இப்போது 60 ரூபாய், 80 ரூபாய் என ஆகி விட்டது. சாலை அமைத்தால் அதில் 40 சதவீதம் லஞ்சமாக போகிறது. நீங்கள் கொடுக்கும் வரியில் 25 சதவீதம் லஞ்சமாக போகிறது. இதற்கு லஞ்ச வரி என ஒன்றை போட்டு ஒழுங்கு படுத்திக்கொள்ளலாம். தற்போது இது வாழ்க்கை முறையாக மாறி விட்டது என்பது தான் கவலை அளிக்கிறது என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்