அதிமுக பொதுச்செயலாளராக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை அதிமுக ஒற்றை தலைமையில் குழப்பம் இல்லாமல் செயல்பட்டு வந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிக்கலா அந்த பதவியை ஏற்றாலும் பின்னர் அவர் சிறை சென்றார். அதன்பின் கட்சிக்கு பொதுச்செயலாளர் இல்லாமல் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இணைந்து ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர்.
ஆனால் ஒருபக்கம் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையே அடிக்கடி முரண்பாடுகளும் எழுந்து வருகின்றன. நேற்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் பேசிய அதிமுக ஜெயக்குமார், கட்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை என வலியுறுத்தி பேசியிருந்தார்.
எனவே இன்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தேனி மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவினர் ஓபிஎஸ் தான் கட்சி தலைமையை ஏற்க வேண்டும் என பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
அந்த போஸ்டரில், அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தான் அதிமுக தலைமையை ஏற்று கட்சியை வழி நடத்த வேண்டும் என வாசகங்கள் பொறிக்கப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்ட்டர்களால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.