காவல் துறையினர் தங்களது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது - ஜி.கே.வாசன்

செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (11:33 IST)
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி இருப்பது கண்டனத்திற்குரியது என்றும் காவல் துறையினர் தங்களது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் தமாகா தலைவர்  ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
 
இது குறித்து  ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழகம் முழுவதிலும் உள்ள மதுக்கடைகளை மூடவேண்டும்.
 
முதல் கட்டமாக இந்த மாத இறுதிக்குள் வழிப்பாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றிற்கு முன்பு செயல்படும் மதுக்கடைகளை மூடவேண்டும். 
 
இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் தமிழகம் முழுவதிலும் ஆர்ப்பாட்டமும் தொடர் போராட்டமும் நடத்தப்படும்.
 
மதுவிலக்கை வலியுறுத்தி கன்னியாகுமரியில் நடைபெறும் முழுஅடைப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்.
 
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி இருப்பது கண்டனத்திற்கு உரியது. காவல் துறையினர் தங்களது அதிகாரத்தை தவறாகக் பயன்படுத்தக் கூடாது." இவ்வாறு  ஜி.கே.வாசன் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்