பருவமழைக் களப்பணியாளர்களுக்கு 5000 ரூ ஊக்கத்தொகை… ஓ பி எஸ் கோரிக்கை!

வெள்ளி, 3 டிசம்பர் 2021 (11:17 IST)
பருவமழைப் பேரிடர் காலத்தில் பணியாற்றிய களப்பணியாளர்களுக்கு 5000 ரூபாய் ஊக்கத்தொகை அளிக்கவேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் ‘நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வம் பெற வேண்டுமெனில் தூய்மை மிகவும் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. தூய்மை என்பது உண்ணும் உணவு, உடுக்கும் உடை, இருக்கும் இடம் ஆகியவற்றில் மட்டுமல்லாமல் சுற்றுப்புறமும் தூய்மையாக இருக்க வேண்டும். இந்தச் சுற்றுப்புறத் தூய்மையை காப்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள். தூய்மையே நோயின் மருத்துவம் என்பதால் தூய்மைப் பணியாளர்களின் பணி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கனமழை, பெருவெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலமானாலும் சரி, கரோனா கொடுந்தொற்று நோய் உச்சக்கட்டத்தில் இருந்தபோது அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காலமானாலும் சரி, புறத்தூய்மை காக்கப்பட வேண்டும், பேணப்பட வேண்டும் என்பதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு, தங்கள் உயிரை துச்சமென மதித்து அல்லும் பகலும் அயராது ஓய்வின்றி உழைப்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.


தூய்மைப் பணியாளர்களின் சேவை பேரிடர் காலங்களின்தான் அதிகம் தேவைப்படுகிறது. அவர்கள் ஓர் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினால்தான் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என்பதில் - யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. அந்த வகையில், 2015ம் ஆண்டு சென்னையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது, வெள்ளத்தால் ஏற்பட்ட குப்பைகளை அகற்றும் பணியில் ஓய்வின்றி ஈடுபட்டவர்கள் தூய்மைப் பணியாளர்கள். போர்க்கால அடிப்படையில் இவர்கள் பணியாற்றியதன் காரணமாக சென்னை வாழ் மக்கள் விரைந்து இயல்பு நிலைக்கு திரும்பினர். இவர்களின் சேவையைப் பாராட்டி, இதயதெய்வம் புரட்சித் தலைவி ஜெயலலிதா உத்தரவின் பேரில், சென்னை மாநகராட்சியின் சார்பில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட அனைத்துத் தூய்மைப் பணியாளர்களுக்கும், மேற்பார்வையாளர்களுக்கும் 2,000 ரூபாய் ஊக்கத் தொகை சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டது. தற்போதைய பெருவெள்ளத்திலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மழை பெய்து கொண்டிருந்த சமயத்திலும், மழை நின்ற சமயத்திலும் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் குப்பைகளை அகற்றும் பணியிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பணியிலும் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதன் காரணமாக, மழைநீர் தேங்கியுள்ள இடங்கள் தவிர, பெரும்பாலான இடங்களில் குப்பைகள் அகற்றப்பட்டுவிட்டன.

கடந்த ஒரு மாத காலமாக மழை விட்டுவிட்டு பெய்து கொண்டிருந்த நிலையிலும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களின் பணி மகத்தானது. இப்படிப்பட்ட பணியாளர்களை ஊக்குவிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசிற்கு உண்டு. 2015 ஆம் ஆண்டே 2,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்ட நிலையில், தற்போதுள்ள விலைவாசி ஏற்றம், கரோனா நோயின் தாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு களப்பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் தலா 5,000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடத்தில் உள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநகராட்சி நகராட்சி அண்ணா பொது ஊழியர்கள் சங்கம் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதர சங்கங்களும் இதனை வலியுறுத்தி வருகின்றன. இதனை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் மாநில அரசிற்கு உண்டு. எனவே, முதல்வர் ஸ்டாலின் இதில் உடனடியாக கவனம் செலுத்தி அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது, தங்களது உயிரை துச்சமென மதித்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக களப்பணி ஆற்றிய தூய்மைப் பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் தலா 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.’ எனக் கூறியுள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்