மத்திய அரசின் முடிவுக்கு திடீர் எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ்

செவ்வாய், 30 மே 2017 (05:03 IST)
மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த மாட்டிறைச்சி சட்டத்திற்கு இந்தியாவில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழக அரசு மட்டும் மெளனம் காத்து வருகின்றது. இது மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக அரசு செயல்படுகிறது என்ற எதிர்க்கட்சியினர்களின் குற்றச்சாட்டை உறுதி செய்வதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.



 


இந்த நிலையில் மாட்டிறைச்சி சட்டத்தை மத்திய அரசின் ஆதரவாளரும், பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுபவருமான ஓபிஎஸ் எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளார். இது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இது குறித்து ஓ.பன்னீரிசெல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதவது: கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து, மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு குறித்து பல்வேறு தரப்பினர், பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர்.

மிருகவதையைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக கூறி, தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர். தமிழ் நாட்டில் உள்ள கோவில்களில் ஆடுகள், கோழிகள் வெட்டக்கூடாது என்ற ஒரு சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தது. 2001-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்து, ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, அந்த சட்டத்தை செயல்படுத்துமாறு உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவிற்கு பக்தர்களிடமிருந்தும், பொது மக்களிடமிருந்தும், எதிர்ப்புக்குரல் வந்தது. அந்த உத்தரவை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அந்த உத்தரவு விலக்கிக் கொள்ளப்படுவதாக ஜெயலலிதா அறிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எடுத்த முடிவைப் போல, மத்திய அரசும் தடை உத்தரவுக்கு எதிராக வருகின்ற கருத்துக்களையெல்லாம், எதிர்ப்புகள் என்று கருதாமல், மக்களின் உணர்வுகள் என்று கருதி, கால்நடைச் சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்கக் கூடாது என்று பிறப்பித்த தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்