சசிகலா நீக்கம்? - நாளைய கூட்டத்தில் ஓ.பி.எஸ், எடப்பாடி, மதுசூதனன்?

ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2017 (16:00 IST)
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாளை நடைபெறும் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

 
இரு அணிகளின் இணைப்பிற்காக, ஓ.பி.எஸ் அணியின் கோரிக்கைகளை எடப்பாடி பழனிச்சாமி ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார் . ஏற்கனவே, தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமித்தது செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. அதன் பின், ஜெ.வின் மரணம் தொடர்பாக விசாரணை மற்றும் போயஸ்கார்டன் வீட்டை நினைவிடமாக மாற்றுவது என அறிவிப்புகளை எடப்பாடி வெளியிட்டார். 
 
இதனால் ஓ.பி.எஸ் - எடப்பாடி அணி இணையும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், தன்னை ஒதுக்கி விட்டு இரு அணிகளும் இணைவது தினகரனுக்கும், அவரின் ஆதரவாளர்களுக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நாளை அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் சசிகலாவை நீக்குவதற்கு அதிமுகவின் சட்டதிட்ட விதிகளில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்படுவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதேபோல், அதிமுக என்கிற கட்சி பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் பயன்படுத்த முடியாத நிலையில், கட்சியை வழிநடத்த வழிகாட்டும் குழு அமைப்பது தொடர்பாகவும் நாளை விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
 
இதில் முக்கியமாக, நாளைய கூட்டத்தில் பொருளாளர் என்கிற முறையில் ஒ.பி.எஸ் மற்றும் அவைத்தலைவராக மதுசூதனன் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என செய்திகள் உலாவருகிறது. ஏனெனில், அவர்கள் இருவரும்தான் சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்து கையெழுத்திட்டனர். தற்போது அவரை நீக்க வேண்டுமெனில் இவர்களின் கையெழுத்து அவசியம். 
 
எனவே, நாளைய கூட்டத்திற்கு பின்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்