ஓபிஎஸ் புயல் டுவிட்டரையும் விட்டுவைக்கவில்லை: நொடிக்கு 100 டுவிட்டுகள் என இந்தியாவில் முதலிடம்!

புதன், 8 பிப்ரவரி 2017 (09:14 IST)
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று நீண்ட மௌன அஞ்சலிக்கு பின்னர் ஊடகங்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் தான் மிரட்டப்பட்டு ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதாக கூறினார்.


 
 
இதனையடுத்து சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள் குறித்து அடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார். ஏற்கனவே தமிழகத்தில் சசிகலாவுக்கு ஏறாழமான எதிர்ப்புகள் நிலவி வந்த சூழலில் ஓபிஎஸின் இந்த திடீர் எழுச்சி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
 
இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஓபிஎஸ்-க்கு ஆதராவாக பொதுமக்கள் பதிவிட்டு வருகின்றனர். நேற்று சமூக வலைதளங்களில் கண்ணில் படும் அனைத்து பதிவுகளும் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவே இருந்தது.
 
டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் நேற்று தமிழகத்தின் அரசியல் சூழலால் தூங்கவே இல்லை. ஓபிஎஸ் ஹேஸ்டேக்குகளால் டுவிட்டர் மிதந்தது. எங்கு பார்த்தாலும் ஒபிஎஸுக்கு ஆதரவாக பதிவுகள் பறந்துகொண்டே இருந்தது.
 
ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஓபிஎஸ், Sasikala, ADMK, OPannerselvam, Panneer, IsupportOPS போன்ற ஹாஸ்டேக்குகளை உருவாக்கி இந்திய அளவில் முதலிடத்தை பிடித்திருந்தது. பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றில் இரவு முழுவதும் இந்த ஹாஸ்டேக்குகளைப் பயன்படுத்தி நொடிக்கு 100 பதிவுகளைப் பார்க்க முடிந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்