தற்கொலைக்கு முயன்ற சங்கரின் மனைவி கவுசல்யாவுக்கு மீண்டும் கவுன்சிலிங்

வெள்ளி, 13 மே 2016 (15:27 IST)
கடந்த மார்ச் மாதம் படுகொலை செய்யப்பட்ட உடுமலைப்பேட்டை சங்கரின் மனைவி கவுசல்யா தற்கொலைக்கு முயன்றதை அடுத்து அவருக்கு மீண்டும் கவுன்சிலிங் கொடுக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
 

 
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர் மற்றும் கௌசல்யா ஆகியோர் காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, கூலிப்படையை வைத்து மார்ச் 13 ஆம் தேதியன்று சங்கரை, கௌசல்யாவின் பெற்றோர் ஆணவப் படுகொலை செய்தனர்.
 
தனது காதல் கணவன் படுகொலை செய்யப்பட்ட நிலையில், கணவனின் குடும்பத்தோடு தொடர்ந்து வாழ்வேன் என்று முடிவெடுத்த கௌசல்யா தனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான பணிகளில் இறங்கினார். பல்வேறு அமைப்புகள் அவருக்கு உதவி செய்ய முன்வந்தன.
 
இந்நிலையில் அவர் நேற்று வியாழனன்று காலை தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை தரப்பட்டு, பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
கணவர் சங்கர் நினைவால் வாடுவதாலேயே கவுசல்யா தற்கொலைக்கு முயன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். எனவே அவருக்கு மீண்டும் கவுன்சிலிங் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
இது குறித்து கூறியுள்ள கோவை அரசு மருத்துவமனை தலைவர் எட்வின் ஜோ, ”தன் கண் முன்னாலேயே கணவர் வெட்டப்பட்ட அதிர்ச்சியில் இருந்த அவருக்கு ஏற்கனவே கவுன்சிலிங் வழங்கினோம்.
 
எனினும் கணவரின் நினைவாலேயே வாடும் அவருக்கு மீண்டும் கவுன்சிலிங் அளிக்க முடிவு செய்துள்ளோம். சிகிச்சை முடிந்து உடல் நிலை தேறியதும் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மூலம் அவருக்கு கவுன்சிலிங் வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்