புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

செவ்வாய், 31 மார்ச் 2015 (17:09 IST)
சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி ஒன்றினைக் கண்டித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று விளக்கம் அளித்தார்.
 
இது குறித்து அவர் அளித்த விளக்கத்தில், புதிய தலைமுறை தொலைக்காட்சி நிர்வாகத்தினர் கடந்த 08.03.2015 அன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ‘பெண்களுக்கு தாலி பெருமையா? சிறுமையா?’ என்ற பெயரில் விவாதம் ஒன்றை ஒளிபரப்பப் போவதாக அறிவித்திருந்தனர். இந்நிகழ்ச்சி பெண்ணினத்திற்கும், இந்திய கலாச்சாரத்திற்கும் எதிரானது என இந்து முன்னணி மற்றும் பிற இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் இந்து முன்னணி சார்பில், அருண்குமார் என்பவர் 06.03.2015 அன்று, மேற்படி தொலைக்காட்சியினர் இந்நிகழ்ச்சியை ஒளிபரப்ப அனுமதிக்கக் கூடாது எனவும், தொலைக்காட்சி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், கிண்டி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
 
இதனைத் தொடர்யது காவல் துறையினர் 08.03.2015 அன்று ஈக்காட்டுத்தாங்கலில் அமைந்துள்ள அத்தொலைக்காட்சி அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு அளித்தனர். தொலைக்காட்சி நிர்வாகத்தினர் மேற்படி நிகழ்ச்சியை எந்தவொரு மாறுதலுமின்றி குறிப்பிட்டபடி ஒளிபரப்ப உள்ளதாக அறிவித்திருந்தனர்.
 
அன்றைய தினம் இந்து முன்னணியின் மாநில செயலாளர் அரசு ராஜா தலைமையில் உறுப்பினர்கள் சுமார் 65 பேர் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்த மேற்படி தொலைக்காட்சி அலுவலகத்தின் பின்பகுதியில் கூடியுள்ளனர். அப்போது அத்தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் செயதில்குமரன் என்பவர் மற்றொரு ஒளிப்பதிவாளருடன் அவர்களை படம் பிடிக்க முயன்றுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த உறுப்பினர்கள் சிலர் அவரைத் தாக்கியதோடு, இரண்டு வீடியோ கேமிராக்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
 
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் உடனடியாகத் தலையிட்டு அவர்களுக்குள் மேலும் அசம்பாவிதம் ஏதும் நடவாமல் பார்த்துக் கொண்டனர். இந்நிலையில் இந்து முன்னணி உறுப்பினர்கள் சுமார்  47 பேர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டபோது, காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். இதனையடுத்து அத்தொலைக்காட்சியினர் அன்றைய தினம் மேற்படி நிகழ்ச்சியை ஒளிபரப்பவில்லை.
 
இச்சம்பவம் தொடர்பாக செந்தில்குமரன் அளித்த புகாரின் பேரில், கிண்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இந்து முன்னணியின் சென்னை மாநகர தலைவர் மனோகரன் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். தொலைக்காட்சியினர் தங்களைத் தாக்கியதாக இந்து முன்னணியின் மாநகர தலைவர் மனோகரன் காவல்துறையினரிடம் ஒரு புகார் அளித்துள்ளார். அப்புகார் தொடர்பாக காவல் துறையினர் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
மேலும் இந்து முன்னணியினர் உறுப்பினர்கள் பலர் மாநிலத்தில் சில இடங்களில் ஆர்ப்பாட்டங்கள்  நடத்தினர். பத்திரிக்கையாளர் சங்கத்தினர் இந்து முன்னணியினருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.
 
இந்நிலையில், 12.03.2015 அன்று அதிகாலை இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், பட்டாசுகள் நிரப்பப்பட்டு சணல் திரியினால் எரியூட்டப்பட்ட நிலையில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டப்பாக்கள் இரண்டை தொலைக்காட்சி அலுவலகத்திற்கு முன்பாக வீசியுள்ளனர். அவற்றில் லேசான சத்தம் எழுந்து மூடிகள் திறந்து புகை வெளிவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டு சம்பவ இடத்திலிருந்து தடயங்களைக் கைப்பற்றினர். இச்சம்பவத்தில் யாரும் காயமடையவோ அல்லது எவ்வித சேதமோ ஏற்படவில்லை.
 
இச்சம்பவம் தொடர்பாக மேற்படி தொலைக்காட்சியின் நிர்வாக மேலாளர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இவ்வழக்கில் எதிரிகளைக் கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் அன்றே, இந்து இளைஞர் சேனா என்ற அமைப்பின் மாநில தலைவரான ஜெயம், ஏ.பாண்டியன் என்பவரின் வாடகை வாகன அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த சிவகங்கையைச் சேர்ந்த மனோகரன் உள்ளிட்ட 5 எதிரிகளைக் கைது செய்து நீதிமன்றக்காவலுக்கு அனுப்பினர். மேலும் அவர்களிடமிருந்து இருசக்கர வாகனங்கள், ஒரு டெயின்லெஸ் ஸ்டீல் டப்பா மற்றும் இரண்டு பட்டாசு பொட்டலங்களையும் கைப்பற்றியுள்ளனர். ஜெயம் ண்டியன் அன்றே மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்யடுத்து அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
 
மேற்படி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வழக்குகள் புலன் விசாரணையில் இருந்து வருகின்றன என்பதை நான் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்