நர்சிங் கல்லூரியில் ராக்கிங் கொடுமையால் மாணவி பலி

செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (16:46 IST)
கோவை, மதுக்கரை அருகேயுள்ள உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படிக்கும் மாணவி, அக்கல்லூரி வளாகத்தில் தலையில் அடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார். மேலும், மருத்துவமனையை முற்றுகையிட்டு மாணவிகளின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
நீலகிரி மாவட்டம் கேத்திபாலாடாவைச் சேர்ந்த ஏசுதாஸ் மகள் பிரசில்லா கோவையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவி கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்த கல்லூரி விடுதியில் நீண்ட நாட்களாக ராக்கிங் நடைபெற்ற வருவதாக புகார் எழுந்துள்ளது.
 
இந்த மாணவி பிரசில்லாவை சீனியர் மாணவியை ராக்கிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு கல்லூரி வளாகத்தில் ரத்தவெள்ளத்தில் தலையில் ரத்தக்காயத்துடன் அந்த மாணவி இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த கல்லூரி உதவியாளர் மதுக்கரை போலீசுக்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
 
இதையடுத்து, கல்லூரி நிர்வாகம் அளித்து புகாரின் பேரில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து உள்ளனர். மேலும், அக்கல்லூரி விடுதி மாணவிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில் மாணவியின் பெற்றோர் இன்று காலை கல்லூரிக்கு வந்தனர். அப்போது தான் அவர்களுக்கு தங்கள் மகள் இறந்த விவரம் தெரியவந்தது. ஏனென்றால் கல்லூரி நிர்வாகத்தினர் நேற்று இரவு ஏசுதாசுக்கு போன் செய்தனர். அப்போது உங்கள் மகளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளோம். உடனே புறப்பட்டு வாருங்கள் என்று கூறியிருந்தனர்.
 
இந்த சம்பவம் குறித்து மாணவியின் தந்தை ஏசுதாஸ் செய்தியாளர்களிடம் கூறியிருப்பது, எனது மூத்த மகள் பிரசில்லா மற்றும் இளைய மகள் மோனிஷா இருவரும் கோவையை அடுத்த மதுக்கரை அருகேயுள்ள மரப்பாலத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். 
 
இந்நிலையில், பிரசில்லா கடந்த வெள்ளிக்கிழமை எனக்கு போன் செய்தாள். அப்போது கல்லூரியில் உள்ளவர்கள் மற்றும் மாணவிகள் என்னை ராக்கிங் செய்கிறார்கள் மேலும்,  தகாத வார்த்தையால் என்னை பேசுகிறார்கள், என்று கூறினாள், பின்னர், நான் அவளிடம் வரும் திங்கள் கிழமை வருகிறேன் என்று தெரிவித்தேன், இப்போது, உங்களுடைய மகள் உயரிழந்துவிட்டாள் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவிக்கின்றனர்
 
என்னுடைய மகள் இறப்பில் மர்மம் இருக்கிறது. தற்கொலை செய்யும் அளவுக்கு அவள் கோழை இல்லை, அவளுடைய தற்கொலையில் சக மாணவிகளுக்கு தொடர்பு இருக்கிறது. ராக்கிங் கொடுமையாள் தான் இறந்திருப்பாள் என்று அவர் கூறினார். இதனால் மருத்துவமனையில் மாணவிகளின் உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, மருத்துவமனையில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்