மழை பாதிப்பிற்கு கடவுளை திட்டி பயன் இல்லை : சத்குரு ஜக்கி வாசுதேவ் கருத்து

வெள்ளி, 18 டிசம்பர் 2015 (09:56 IST)
சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி மக்கள் பாதிக்கப்பட்டதற்கு கடவுளை திட்டி பிரயோஜனம் இல்லை என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் கருத்து தெரிவித்தார்.


 
 
சென்னை, கடலூர் உட்பட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஈஷா யோகா மையம் சார்பில் நிவாரண பணிகளில் ஈடுபட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பங்கேற்கும் “சத்சங்க” எனும் கலந்துரையாடல நிகழ்ச்சி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று (டிச்.17) நடை பெற்றது.
 
இதில் கலந்து கொண்ட ஜக்கி வாசுதேவ், நிவாரண பணிகளில் ஈடுபட்ட தன்னார்வ தொண்டர்களிடம் கலந்துரையாடினார். அதன் பின் நிவாரண பணிகளில் சிறப்பாக பணியாற்றிய 7 பேர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினார். அதில் நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபனும் ஒருவர்.
 
அதன் பின் ஜக்கி வாசுதேவ் பேசினார். அதில் “தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிப்புகள் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவ பெருமளவில் உதவி வந்ததை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இப்படிப்பட்ட எண்ணங்கள் தான் இந்த சமயத்தில் உதவி.
 
பேரிடர் என்பது இயற்கையின் தாக்கம் தான். அதற்காக கடவுளை திட்டி பயனில்லை. பூமியின் சூழ்நிலையை உணராமல் போனது யார் குற்றம்? ஏரிப்பகுதிகளை ஆக்கிரமித்தது யார்? இந்த தவறுகள் திருத்தப்படவேண்டும். ஆனால் இதை யோசிக்க நாம் தயாராக இல்லை.
 
நான் தவறு செய்துவிட்டேனா? இது தான் இப்போது எல்லாரும் எண்ணிப்பார்க்க வேண்டிய கேள்வி. சமூக அக்கறையில் மனிதனின் பங்கு மிக முக்கியமானது. இதனை எண்ணிப்பார்த்து, இயற்கையோடு இணைந்து வாழ பழகிக்கொண்டாலே நல்லது.
 
இனி வரும் காலங்களில் பேரிடர் சமயங்களில் உதவி செய்யும் நபர்களாக இருக்கப்போகிறீர்களா? அல்லது உதவி பெறும் நபர்களாக இருக்கப்போகிறீர்களா? என்பதை யோசித்து செயல்படுங்கள்” என்று அவர் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்