அரசின் இலவச கிரைண்டரால் 'ஆட்டாங்கல்' உற்பத்தி அடியோடு முடக்கம்

ஈரோடு வேலுச்சாமி

வியாழன், 16 அக்டோபர் 2014 (12:41 IST)
தமிழக அரசு வழங்கும் இலவச கிரைண்டர் வருகையால், ஆட்டாங்கல் விற்பனை சரிந்து, தொழிலே முற்றிலும் முடங்கிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

 
இயந்திரங்கள் கண்டுபிடிக்காத காலத்தில் மாவு, சட்னி உள்ளிட்டவற்றை ஆட்டுவதற்கு ஆட்டாங்கல் (ஆட்டுக்கல்) பயன்படுத்தி வந்தனர். இதேபோல் அரைப்பதற்கு அம்மிக்கல் பயன்படுத்தி வந்தனர். நவீன அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்பட்டு, மின்சாரம் வந்ததற்குப் பிறகு, இயந்திர வாழ்க்கைக்கு மனிதன் மாறியதன் காரணமாக ஆட்டுவதற்குக் கிரைண்டரும் அரைப்பதற்கு மிக்ஸியும் பயன்பாட்டுக்கு வந்தன.
 
ஆரம்பத்தில் வசதியுள்ளவர்கள் மட்டும் கிரைண்டர் மற்றும் மிக்ஸிகளை வாங்கினார்கள். இதனால் ஆட்டாங்கல் மற்றும் அம்மிக்கல் விற்பனை சரிந்தாலும் தொழிலில் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும்போது அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவச மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தார்.
 
அதே போல் ஆட்சியைப் பிடித்தது முதல் இதுவரை ஒவ்வொரு கட்டமாகத் தமிழக அரசு, இலவசமாக கிரைண்டர், மிக்ஸி மற்றும் ஃபேன் ஆகியவற்றை வழங்கி வருகிறது. இதன் காரணமாக, ஆட்டாங்கல் மற்றும் அம்மிக்கல் விற்பனை அடியோடு முடிவுக்கு வந்துவிட்டது. தற்போது ஆட்டாங்கல், அம்மிக்கல் வாங்குவதற்கு ஆள் இல்லை என்கின்றனர் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள்.
 
இது குறித்து, ஈரோட்டில் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஜெயகுமார், ஜெயா தம்பதிகள் கூறியது:
 
கடந்த இருபது வருடங்களாக இந்தத் தொழில் செய்து வருகிறோம். ஒரு ஆட்டாங்கல் தயாரிக்க எங்களுக்கு இரண்டு நாள் தேவைப்படும். ஒன்று ரூ. 400க்கு விற்பனை செய்கிறோம். இதில் எங்களுக்கு செலவு கழித்து ரூ. 150 கிடைக்கும். அம்மிக்கல் ரூ. 250க்கு விற்பனை செய்தால் ரூ. 100 லாபம் கிடைக்கும்.
 
ஆனால் தற்போது இந்த விற்பனை அடியோடு நின்றுவிட்டது. தற்போது எங்களிடம் இருக்கும் ஆட்டாங்கற்களை விற்பனை செய்துவிட்டு, வேறு தொழிலுக்கு மாறிவிடலாம் எனத் திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்