தவறு செய்தவர்கள் தப்ப முடியாது - தமிழிசை சவுந்தரராஜன் அதிரடி

வியாழன், 22 டிசம்பர் 2016 (11:50 IST)
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், மோடி ஆட்சியில் தப்பிக்க முடியாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மோடியின் அறிவிப்புக்கு பின், கருப்பு பணங்களை பதுக்குபவர்களை குறிவைத்து மத்திய அரசு செயல் பட்டு வருகிறது.
 
இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தொழிலதிபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த சோதனைகளில் ஏராளமான பணம் மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், சென்னையில் தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ் ஆகியோரிடம் நடத்திய சோதனையில் பல கோடி ரொக்க பணம் மற்றும் தங்க நகைகள் சிக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இதுபற்றி கருத்து தெரிவித்த தமிழிசை சவுந்தரராஜன் “ இதற்கு முன் சிலரை நெருங்கவே முடியாது.. அவர்களிடம் அதிகாரிகள் சோதனை நடத்தவே முடியாது என்ற ஒரு எழுதப்படாத விதி இருந்தது. அதை பிரதமர் மோடி மாற்றியுள்ளார். எவ்வளவு உயர் பதவிகளில் இருந்தாலும், அவர் கண்காணிக்கப்படுவார் என்ற நிலை உருவாகியுள்ளது.
 
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தப்பிக்க முடியாது என்பது நிரூபணம் ஆகியுள்ளது. வங்கியில் ரூ. 2 ஆயிரம் பணம் எடுக்க சாதாரண மக்கள் வரிசையில் நிற்கிறார்கள். ஆனால் சில பண முதலைகள் புதிய ரூபாய் நோட்டுகளை கட்டு கட்டாக வைத்துள்ளனர். அவர்களைத்தான் மோடி அரசு களையெடுத்து வருகிறது.
 
இந்த நடவடிக்கையை மோடி எடுக்காவிடில், இப்படித்தான் கருப்புப் பணம் பதுக்கப்பட்டு கொண்டே இருக்கும். இது தைரியமான முயற்சி. தமிழ்நாட்டில் பல பெரும்புள்ளிகள் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். அவர்களை பிடிப்பது சாதாரண விஷயமல்ல. பல விமர்சனங்களை தாண்டி வர வேண்டும். அதை மோடி துணிச்சலுடன் செய்து வருகிறார்” என்று கூறினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்