தமிழகம் பெண்கள் மேம்பாட்டுக்கான சிறந்த இடம் - நிர்மலா சீதாராமன்

புதன், 8 ஜூலை 2015 (16:09 IST)
தமிழகம் பெண்கள் மேம்பாட்டுக்கான சிறந்த இடமாக எப்போதும் திகழ்ந்து வருகிறது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
 
சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியின் ’நூற்றாண்டு விழா’ கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், "தமிழகம் பெண்கள் மேம்பாட்டுக்கான சிறந்த இடமாக எப்போதுமே திகழ்ந்து வருகிறது. நானும் இதில் பங்கு வகிக்கிறேன் என்று நினைக்கும்போது மிகுந்த பெருமையாக உள்ளது.
 
கல்வி நிறுனங்கள், மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே வேளையில், பெண்கள் மேம்பாட்டுக்கும், சிறந்த மனிதர்களை உருவாக்குவதற்கான முயற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட வேண்டும். அந்த வகையில், நூற்றாண்டைக் கடந்துள்ள மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சிறந்த கல்விச் சூழலை மாணவிகளுக்கு தொடர்ந்து உருவாக்கித் தருவதோடு, பெண்கள் மேம்பாட்டுக்கும் அடித்தளம் அமைத்து வருவது மிகுந்த பாராட்டுக்குரியது" என்றவர், தொடர்ந்து கல்லூரியின் நூற்றாண்டு லோகோவை அறிமுகம் செய்து வைத்தார். 
 
மேலும் இந்த விழாவில் கல்லூரி முன்னாள் மாணவியும், தேசிய காவலர் பயிற்சி அகாடமியின் முதல் பெண் இயக்குநருமான அருணா பஹுகுனாவும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்