இந்த நிலையில் மூன்றாவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியதால் அந்த அணைக்கு வந்து கொண்டிருக்கும் தண்ணீர் மொத்தமாக திறந்துவிடப்பட்டு வெளியேற்றப்பட்டும் வருகிறது. வினாடிக்கு 53,700 கனாடி நீர் காவிரிக்கும், 23,400 கன அடி நீர் கொள்ளிடத்திற்கும் பிரித்து விடப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு திருச்சி முக்கொம்பு மேலணையில் 8 மதகுகள் உடைந்து, மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேறியது. இதனால், அந்த பகுதியின் கரையோர மக்கள் அச்சமடைந்துள்ளனர். 3 ஆணைகளில் இருந்து வரும் நீரை காவிரி, கொள்ளிடம் என இரண்டாக பிரித்து அனுப்பும் பகுதியாக முக்கொம்பு செயல்படுகிறது.
இருப்பினும் மற்ற மதகுகள் வழியே வெளியேறும் தண்ணீரின் அளவை அதிகாரிகள் குறைத்துவிட்டதால் மதகுகள் உடைப்பால் சேதம் ஏற்பட வாய்ப்பில்லை என்றும், பொதுமக்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் உடைந்த மதகுகளை சரிபார்க்கும் பணி விரைவில் முடிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.