பாகிஸ்தான் உளவாளி செல்வராஜின் வங்கி கணக்குகள், பாஸ்போர்ட்கள் முடக்கம்

திங்கள், 15 செப்டம்பர் 2014 (16:56 IST)
சென்னையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராஜின் வங்கிக் கணக்குகளையும், பாஸ்போர்ட்டுகளையும் தேசிய புலனாய்வுத்துறையினர் முடக்கியுள்ளனர்.
 
சென்னையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராஜ், இலங்கையில் கொழும்பு நகரத்தைச் சேர்ந்தவர். இலங்கையில் போர் மூண்டபோது, அருண் செல்வராஜ், தனது பெற்றோருடன், சென்னை வந்து தங்கியுள்ளார். 8வது வகுப்பு முதல் 10வது வகுப்பு வரை சென்னையில் படித்துள்ளார்.
 
2008ஆம் ஆண்டு மீண்டும் இலங்கை சென்று அங்கு படித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்திலும், இவர் ஒரு அலுவலகத்தை நடத்தி வந்துள்ளார்.
 
இவரது வீட்டில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் வங்கி கணக்கு புத்தகங்கள் கிடைத்துள்ளன. அந்த வங்கிக் கணக்கை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது ரூ.2.5 கோடி வரை பணம் இலங்கையில் இருந்து ஆன்லைன் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
 
ஏற்னவே கைது செய்யப்பட்ட உளவாளிகள் தமீம் அன்சாரி, ஜாகீர் உசேன் ஆகியோருடன் செல்போனில் பேசி இருக்கிறார். இவரை கடந்த ஒரு மாதமாக செல்போன் பேச்சை கண்காணித்து வந்த தேசிய புலனாய்வுத்துறையினர் கடந்த 10 ஆம் தேதி சென்னையில் கைது செய்தனர்.
 
இதனிடையே, செல்வராஜின் 6 வங்கிக் கணக்குகளையும், இரண்டு பாஸ்போர்ட்டுகளையும் தேசிய புலனாய்வுத்துறையினர் முடக்கியுள்ளனர். மேலும் செல்வராசனுக்கு வங்கியில் பணப் பரிமாற்றம் செய்தவர்கள் குறித்தும், வெளிநாட்டில் இருந்து ரூ.2.5 கோடி வந்தது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்