நியூஸ் 7 செய்தியாளர் பாலமுருகன் மீது தாக்குதல்: அன்புமணி கண்டனம்

வியாழன், 26 நவம்பர் 2015 (00:17 IST)
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் பாலமுருகன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை நகராட்சி பஸ் நிலைய கழிவறை பிரச்சினை குறித்து, செய்தி சேகரித்த நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் பாலமுருகன் மீது கொடூர தாக்குதல் நடைபெற்றுள்ளது.
 
தேவக்கோட்டை நகராட்சியின் முன்னாள் துணைத் தலைவரும், நகர திமுக நிர்வாகியுமான பாலா என்பவர் கழிவறையை ஏலத்தில் எடுத்த வகையில் நகராட்சிக்கு பெருமளவில் பாக்கி செலுத்த வேண்டியிருந்ததாக கூறப்படுகிறது.
 
இதுதொடர்பான நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைகளை பாலமுருகன் படம் பிடித்ததால் அவர் மீது திமுக நிர்வாகி பாலா அவரது ஆதரவாளர்களுடன் வந்து தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
 
இத்தாக்குதலில் படுகாயம் அடைந்த பத்திரிகையாளர் பாலமுருகனை அப்பகுதி மக்கள் மீட்டு  தேவக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
 
ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று போற்றப்படும் ஊடகத் துறையினர் மீதான தாக்குதல்களை ஏற்க முடியாது. இவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.  
 

வெப்துனியாவைப் படிக்கவும்