எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அமைச்சர்கள் ஆளுக்கொரு கருத்து கூறி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தேனி பகுதிகளில் ஓபிஎஸ் அடுத்த முதல்வர் என போஸ்டர் ஒட்டப்பட்டு பிறகு அகற்றப்பட்டது. பிறகு சுதந்திர தின விழா அன்று அதிமுகவின் முக்கிய அமைச்சர்கள் இபிஎஸ் – ஓபிஎஸ் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய நிலையில் கட்சி தலைமை அனுமதி இல்லாமல் பொதுவெளியில் கருத்துகளை பகிர வேண்டாம் என கூட்டறிக்கை விடப்பட்டது.
இந்நிலையில் தற்போது அமைச்சர் உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜூ ஆகியோர் இரண்டாவது தலைநகர் தமிழகத்திற்கு தேவை என்று குரல் எழுப்ப தொடங்கியுள்ளனர். மதுரையை மையப்படுத்தி தென் மாவட்டங்களை இணைத்து உருவாகும் புதிய தலைநகருக்கு தேனி பிரமுகரும், சென்னை தலைநகரில் கொங்கு மண்டலத்தாரும் நிர்வகிக்க வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் அதிகாரப்பூர்வமற்ற பேச்சு எழுந்துள்ளது.
எனினும் புதிய தலைநகரம் நிர்வாக பரவலாக்கத்திற்காகவும், தொழில் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு உருவாக்க வேண்டிய தேவையுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தலைநகரம் என்பது எம்ஜிஆர் காலத்திலிருந்தே இருந்து வரும் கனவு திட்டம் என அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது