ஹைட்ரோ கார்பன் போராட்டத்தில் நக்சலைட் ஊடுருவல்: ஒரே போடாக போட்டார் எச்.ராஜா!

புதன், 1 மார்ச் 2017 (15:29 IST)
தமிழகத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் நக்சலைட்கள் ஊடுருவியுள்ளதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.


 
 
தீனதயாள் உபாத்யாயா நூற்றாண்டு விழா மற்றும் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அமெரிக்காவில் ஷேல் கியாஸ் எடுப்பதால்தான் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருகிறது என்றார்.
 
மேலும் இந்தியாவிலே குஜராத்தில் தான் எண்ணெய் வயல்கள் அதிகம் உள்ளது. மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்டு ஆட்சி இருக்கும் போது அங்கு மீத்தேன் எடுக்கப்பட்டது. ஆனால் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
 
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடந்த போது இளைஞர்கள் மத்தியில் பிரிவினை சக்திகளும், நக்சலைட்டுகளும் ஊடுருவியுள்ளதாக முதலில் டுவிட்டரில் தெரிவித்தது நான் தான். அதே போல் தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்திலும் மத்திய அரசுக்கு எதிராக பிரிவினைவாத, நக்சலைட்டுகள் ஊடுருவி உள்ளன என்றார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்