அரசியலில் இருந்து ஒதுங்கி சொந்த ஊருக்கு திரும்பும் நாஞ்சில் சம்பத்!

புதன், 4 ஜனவரி 2017 (15:25 IST)
சொந்த ஊருக்கு செல்ல இருக்கிறேன்; புத்தகங்கள் படித்து மேலும் பல புத்தகங்கள் எழுத உள்ளேன்; பொது வாழ்க்கை எனக்கு போதும் என்று அதிமுக தலைமைக் கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.


 

கடந்த 5ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் மறைவை அடுத்து, ஜெயலலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையில், கடந்த நாஞ்சில் சம்பத் அரசியலில் இருந்து விலகிவிட்டதாக தகவல்கள் பரவின.

இதனிடையே தற்போது நாஞ்சில் சம்பத், அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணையப்போவதாகவும் இது குறித்து நெருங்கிய ஆதரவர்களிடம் ஆலோசனை செய்ததாகவும் செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில், தனக்கு வழங்கப்பட்ட காரை கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்தார். ஏற்கனவே திமுகவில் இணையப்போவதாக செய்திகள் வந்த நிலையில், தனக்கு வழங்கப்பட்ட காரை ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், ”திமுகவில் நான் இணைய வேண்டும் என்று நண்பர்கள் சிலர் அழைத்தனர். அந்த முடிவுக்கு நான் வரவில்லை என்று கூறி இருக்கிறேன்.

இப்போது என்னால் அதிக அளவு புத்தகங்களை படிக்க முடியவில்லை. நான் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனை அருகே உள்ள சொந்த ஊருக்கு செல்ல இருக்கிறேன். புத்தகங்கள் படித்து மேலும் பல புத்தகங்கள் எழுத உள்ளேன். பொது வாழ்க்கை எனக்கு போதும்.

அதிக அளவு புத்தக கண்காட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன். வருகிற 11ஆம் தேதி நடைபெறும் சென்னை புத்தக கண்காட்சி விழாவில் பேசுகிறேன். சொற்பொழிவு, இலக்கியம், பட்டிமன்றம் போன்ற மேடை நிகழ்ச்சிகளில் எனது கொடி பறக்கும்.

33 வருடமாக ஜெயலலிதாவுடன் சசிகலா இருந்ததாக கூறுகிறார். சசிகலாவை இதுவரை நான் சந்தித்தது இல்லை. ஜெயலலிதா இடத்தில் சசிகலாவின் செயல்பாடு அவரது எதிர்கால செயல்பாட்டை பார்த்துதான் சொல்ல முடியும்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்