நாகர்கோவிலில் இரண்டு வயது பெண் குழந்தையை சாமியார் ஒருவர் கடத்தி நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவிலை சேர்ந்த கண்ணன் – அகிலா தம்பதியரின் இரண்டு வயது பெண் குழந்தை சஸ்விகா. சமீபத்தில் சஸ்விகா மணலியில் உள்ள தனது தாத்தா வீட்டின் முன்புற திண்ணையில் விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார்.
இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்த போலீஸார் சுற்றுப்புறத்தில் தேட தொடங்கினர். அருகில் ஒரு கிணறு இருந்ததால் குழந்தை கிணற்றில் விழுந்திருக்கலாம் என கிணற்றிலும் தேடப்பட்டது. தொடர்ந்து இரவு வரை போலீஸாரும், அக்கம்பக்கம் இருந்த மக்களும் தேடி வந்த நிலையில் சில கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் இருந்த காரகொண்டான்விளை தென்னந்தோப்பில் குழந்தை அழும் சத்தம் கேட்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அங்கிருந்த குடிசைக்குள்ளிருந்து குழந்தையின் சத்தம் கேட்டு கதவை திறந்த போலீஸார் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஒரு மந்திரவாதி குழந்தையை வைத்து அமானுஷ்யமான சில பூஜைகளை செய்து வந்துள்ளார். உடனடியாக அவரை கைது செய்து குழந்தையை மீட்டுள்ளனர்.
விசாரணையில் மந்திரவாதி 68 வயதான ராசப்பன் என்றும், மாந்திரீகரான ராசப்பன் குழந்தையை கடத்தி சென்று நரபலி கொடுப்பதற்காக பூஜைகள் நடத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.