அரசியல் காரணமாக எனது வீட்டை ஜப்தி செய்துள்ளனர் - மகேந்திரன் குற்றச்சாட்டு

வியாழன், 5 மே 2016 (19:31 IST)
எனது வீட்டை ஜப்தி செய்தததற்கு அரசியல் காரணம் உள்ளதாகவே நான் சந்தேகப்படுகிறேன். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி. மகேந்திரன் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய மகேந்திரன், “மாணவர்களுக்கு வழங்கக்கூடிய கல்விக் கடனில் மிக மோசமான நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. கடன் பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் பலரை கடனை திருப்பி கட்டக்சொல்லி துன்பப்படுத்தும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. இந்த பிரச்சனைகள் குறித்து நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம்.
 
என்றாலும் இந்தமாதியான பாதிப்பு தனிப்பட்ட முறையில் எனக்கே ஏற்பட்டுள்ளது. என்னுடைய மகள் கல்விக் கடன் பெற்று ஆஸ்திரேலியாவில் பணி செய்து வருகிறார். அவர், 2007ம் ஆண்டு தேனாம்பேட்டையிலுள்ள இந்தியன் வங்கியில் ரூ.11 லட்சம். கடன் பெற்றார்.
 
இதில் வட்டியுடன் ரூ.15 லட்சத்து 29 ஆயிரத்து 487 திருப்பி செலுத்தியுள்ளோம். நான் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியன். கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியர்கள் தங்களுடைய குடும்பம் மற்றும் அரசியல் வாழ்க்கையில் தங்களுக்கென்று நெறிமுறை உண்டு. அந்த நெறிப்படி வாழ்ந்து வருகிறோம்.
 
அப்படிப்பட்ட எங்கள் கட்சிக் குடும்பங்களை சேர்ந்தவர்கள் அரசு மற்றும் வங்கிகளில் கடனை பெறுகிறோம். அந்த கடனை முறையாக கட்ட வேண்டும் என்ற அடிப்படையில் இதுவரைக்கும் 15 லட்சத்துக்கும் அதிகமாக கடனை திருப்பி கட்டியிருக்கிறோம்.
 
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், எனது மகள், மார்ச் மாதத்தில் ரூ.60 ஆயிரமும், ஏப்.28ம் தேதி ரூ. 42 ஆயிரமும் தவணையாக கட்டியுள்ளார். மீதமுள்ள ஒன்றரை லட்சத்தையும் மூன்று மாதத்திற்குள் கட்டிவிடுவதாகவும் உத்தரவாதம் அளித்தார்.
 
நான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும்போது தேனாம்பேட்டை இந்தியன் வங்கி மேலாளர் எடுத்த நடவடிக்கையால் மேற்கு மாம்பலத்தில் 800 சதுர அடியில் எனக்கு சொந்தமான வீடு ஜப்தி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து எனக்கும், எனது மகளுக்கும் எந்தவிதமான முன் அறிவிப்பும் தெரிவிக்கவில்லை.
 
இந்த வீடும் வங்கியில் கடன் பெற்றுத்தான் வாங்கினேன். அந்த கடனை முறையாக செலுத்தியிருக்கிறேன். தேர்தல் நேரத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பதை எனது தனிப்பட்ட பிரச்சனையாக கருதவில்லை. இதற்கு அரசியல் காரணம் உள்ளதாகவே நான் சந்தேகப்படுகிறேன்.
 
எனது வீட்டை ஜப்தி செய்த வங்கி அதிகாரிகளை வன்மையாக கண்டிப்பதோடு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோருகிறேன். மாணவர்கள் கல்விக் கடன் குறித்து மத்திய பாஜக அரசு வெளிப்படையான கொள்கையை வகுக்க வேண்டும்" இவ்வாறு மகேந்திரன் தெரிவித்தார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்