ஆம்பூர் கலவரம்: சிறுபான்மையினர் வாக்குகளுக்காக அரசியல் கட்சிகள் மவுனம் - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

திங்கள், 6 ஜூலை 2015 (23:46 IST)
சிறுபான்மையினர் வாக்குகளுக்காக, ஆம்பூரில் நடைபெற்ற கலவரம் குறித்து எந்த அரசியல் கட்சிகளும் கருத்து தெரிவிக்காமல் மவுனம் சாதிக்கின்றன என பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
ஆம்பூரை அடுத்த விண்ணமங்கலத்தில் பாஜக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.
 
அப்போது, பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
வேலூர் அருகே உள்ள ஆம்பூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரும் கலவரம் வெடித்து. கலவரத்தில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தாக்கப்பட்டுள்ளனர். காவல்துறை வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த கலவத்தால் பொது மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
ஆனால், இந்த கலவரம் குறித்தும், பொது மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் எந்த அரசியல் கட்சிகளும் வாய் திறக்காமல் மவுனம் சாதிக்கின்றன.
 
இவ்வாறு, அரசியல் கட்சிகள் மவுனம் சாதிப்பது, சிறுபான்மை மக்களின் வாக்குகளுக்காகவா அல்லது வேறுகாரணமா என எனக்குத் தெரியவில்லை.
 
எனவே, இந்த கலவரம் நடைபெற காரணமாக இருந்தவர்களை அரசு உடனே தயவு தாட்சன்யம் இன்றி கைது செய்ய வேண்டும் என்றார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்