திமுக, அதிமுக கவுன்சிலர்கள் கள்ளக்காதல்: கொலை, தற்கொலை

புதன், 16 ஜூலை 2014 (09:03 IST)
பெரம்பலூர் திமுக கவுன்சிலருக்கும், அதிமுக பெண் கவுன்சிலருக்கும் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால், திமுக கவுன்சிலர் கொலை செய்யப்பட்டார், பெண் அதிமுக கவின்சிலர் தற்கொலை செய்து கொண்டார்.
 
பெரம்பலூர் நகராட்சி 11 ஆவது வார்டு திமுக கவுன்சிலர் அன்புமுத்து(38). வெங்கடேசபுரத்தில் வசித்து வந்தார். இவரது மனைவி ஜெயலட்சுமி (33). மகள் செம்மொழி.
 
8 ஆவது வார்டு அதிமுக கவுன்சிலர் தீபா (38). துறைமங்கலம் பள்ளி வாசல்தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவரது கணவர் மயில்சாமி. இவர்களுக்கு வருண், ராகேஷ் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
 
தீபாவுக்கும், அன்புமுத்துவுக்கும் ஓராண்டுக்கு முன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது மயில்சாமிக்கு தெரியவந்து தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், அவர் கேட்கவில்லை. இதனால் 6 மாதத்துக்கு முன் தீபாவைவிட்டு மயில்சாமி பிரிந்து சென்றுவிட்டார். மகன்கள் இருவரும் அருகில் உள்ள பாட்டி வீட்டில் வசிக்கின்றனர். தீபா மட்டும் தனியாக வசித்து வந்தார்.
 
நேற்று மதியம் 3 மணிக்கு தீபாவின் வீட்டு வராண்டாவில் கவுன்சிலர் அன்புமுத்து தலை, வயிறு ஆகிய பகுதியில் பலத்த வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு பெரம்பலூர் எஸ்பி சோனல்சந்திரா மற்றும் காவல்துறையினர் சென்று விசாரணை நடத்தினர். அன்புமுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
பெண் கவுன்சிலர் வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது. கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அங்கு மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தீபா தற்கொலை செய்து கொண்டிருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரது உடலையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெரம்பலூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்