எடப்பாடி அணிக்கு மாறிய தினகரன் ஆதரவு எம்பி வசந்தி முருகேசன்: ஆட்டம் காணும் கூடாரம்!

வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (11:22 IST)
தினகரனுக்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கிய எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்ததின் மூலம் தினகரன் அணியில் உள்ளவர்கள் ஆடிப்போய் உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் தினகரன் கூடாரம் காலியாகும் என தகவல்கள் வருகின்றன.


 
 
தினகரனுக்கு ஆதரவாக இருந்த எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு எப்படி வரும் என்பது தெரியவில்லை. தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என நீதிமன்றம் அறிவித்தாலும் எடப்பாடி தரப்பு மேல்முறையீட்டுக்கு செல்லும். இதனால் தொடர்ந்து அந்த எம்எல்ஏக்களுக்கு சிக்கல் தான் என கூறப்படுகிறது.
 
அதுமட்டுமல்லாமல் பழைய வழக்குகள் தூசி தட்டப்பட்டு பழி வாங்கும் நடவடிக்கையை ஆரம்பிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தினகரன் கூடாரத்தில் உள்ள தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் கிலியில் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அவர்கள் விரைவில் எடப்ப்பாடி அணிக்கு வந்து ஆதரவு தெரிவிப்பார்கள் என பேசப்படுகிறது.
 
இந்நிலையில் தினகரன் அணியில் இருந்த நெல்லை மாவட்டம், தென்காசி தொகுதி (தனி) எம்பி வசந்தி முருகேசன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாற உள்ளதாக நேற்றே நமது தளத்தில் தெரிவித்திருந்தோம். அதே போல இன்று எம்பி வசந்தி முருகேசன் தனது நிலைப்பாட்டை மற்றிக்கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தி தனது ஆதரவை அளித்தார்.

இவரையடுத்து இன்னும் 6 எம்பிக்கள் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. தினகரன் அணிக்கு 8 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்திருந்தநிலையில் இந்த எண்ணிக்கை தற்போது 7-ஆக குறைந்துள்ளது. மேலும் 6 எம்பிக்கள் எடப்பாடி அணிக்கு வரும் பட்சத்தில் தினகரன் அணியின் எம்பிக்கள் எண்ணிக்கை 1-ஆக குறைந்துவிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்