மவுலிவாக்கத்தில் கனமழை ; 11 மாடி கட்டிடம் இடிக்கப்படுமா?
புதன், 2 நவம்பர் 2016 (14:28 IST)
மௌலிவாக்கத்தில் பெய்யும் கனமழை காரணமாக 11 மாடிக்கட்டிடம் இடிக்கப்படுவது நிறுத்தப்படாது என சி.எம்.டி.ஏ. அதிகார் கூறியுள்ளார்.
சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் புதிதாக 11 அடுக்குமாடிகள் கொண்ட 2 கட்டிடங்கள் கட்டப்பட்டு வந்தது. கடந்த 2014–ம் ஆண்டு ஜூன் 28–ந் தேதி ஒரு அடுக்குமாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 61 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இதையடுத்து அருகில் உள்ள மற்றொரு 11 மாடி கட்டிடத்தை இடிக்க காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டும் கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டது.
இதையொட்டி கட்டிடத்தை சுற்றி 100 மீட்டர் சுற்றளவில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த கட்டிடத்தை இடிக்கும் பொறுப்பு ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மவுலிவாக்கத்தில் காலையிலிருந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் கட்டிடம் இடிக்கப்படுமா என சந்தேகம் எழுந்தது. ஆனால், மழை காரணமாக கட்டிடத்தை இடிக்கும் பணி நிறுத்தப்படாது என்று சி.எம்.டி.ஏ அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
கட்டிடத்தை தகர்ப்பதற்காக வெடிபொருட்கள் நிரப்பும் பணி இன்று காலை நிறைவு பெற்றது. கட்டிடத்தில் துளையிட்டு அந்த வெடி மருந்துகள் நிரப்பப்பட்டன. மொத்தம் 70 கிலோ வெடி மருந்துகள் பயன்படுத்தப்பட்டன.
கட்டிடம் தகர்க்கப்படும் போது, புழுதியைக் கட்டுப்படுத்தவும், கட்டிய இடிபாடுகள் வெளியில் வந்து விழாமல் தடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், கட்டிடத்தை சுற்றி 200 மீட்டர் பரப்பளவுக்கு ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்பட்டு, அங்கு சிகப்பு கொடிகள் நடப்பட்டுள்ளது. அந்த பகுதிக்குள் பொதுமக்கள் யாரும் நுழையா முடியாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மழை காரணமாக இன்று மாலை 5 மணியளவில் கட்டிடம் இடிக்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளார்கள்.