மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் ரூ.20.28 கோடி இழப்பீடு கோரிய மனு தள்ளுபடி

வெள்ளி, 9 அக்டோபர் 2015 (05:04 IST)
சென்னை மவுலிவாக்கத்தில் நடைபெற்ற கட்டிட விபத்தில் இழப்பீடு கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
 

 
சென்னை போரூர் மவுலிவாக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து தரை மட்டமானது. கட்டிடம் இடிந்த போது, அங்கு 72 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
 
துணை ராணுவ வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், கமாண்டோ படை வீரர்கள், சென்னை மாநகர போலீசார், தீயணைப்பு படையினர், மெட்ரோ ரெயில் ஊழியர்கள் உள்ளிட்ட சுமார் 2200 பேர் 11 மாடி கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு பலரை மீட்டனர். 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 48 பேர் பலியானார்கள்.
 
இந்த 11 மாடிக் கட்டிடத்தில் 48 பேர் குடியிருப்புகளை வாங்கி இருந்தனர்.இவர்கள் அனைவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், ரூ. 20 கோடியே 28 லட்சம் கொடுத்து குடியிருப்பு வாங்கினோம். அரசு அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் கட்டுமான நிறுவனத்தின் தவறால்தான் விபத்து ஏற்பட்டது. இதனால் நாங்கள் பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.எனவே, வீடு இடிந்ததற்கு அந்த நிறுவனமும், தமிழக அரசும் ரூ.20.28 கோடி இழப்பீடுதர உத்தரவிட என்று கூறி இருந்தனர்.
 
இந்த மனு தலைமை நீதிபதி கவுல், நீதிபதி புஷ்பா நாராயணா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என கூறி, மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்