காலதாமதமின்றி வெள்ள நிவாரண தொகை வழங்கவேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை

புதன், 25 நவம்பர் 2015 (05:20 IST)
தமிழகத்தில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, மத்திய அரசு ஒரு குழுவை உடனே அனுப்பி பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து முழு நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–
 
தமிழகத்தில் கனமழையால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
 
கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழையினால் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சமுதாய கூடங்களிலும், அரசு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவு, உடை மற்றும் பாதுகாப்பு போன்ற தேவைகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும்.
 
மத்திய அரசு தமிழகத்திற்கு நிவாரணமாக வழங்கியிருக்கும் தொகை முதல் தவணையாக மட்டுமே இருக்க வேண்டும். தமிழகத்திற்கு ஒரு குழுவை உடனே அனுப்பி, பாதிக்கப்பட்ட பகுதிகளை முழுமையாக ஆய்வு செய்து வேண்டும். மேலும், தமிழகத்திற்கு தேவையான முழு நிவாரண தொகையை காலதாமதமின்றி வழங்க முன்வரவேண்டும் என தெரிவித்துள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்