எனக்கு புத்தகங்கள் வழங்குங்கள்: ஸ்டாலின் வேண்டுகோள்

ஞாயிறு, 26 பிப்ரவரி 2017 (15:42 IST)
எனது பிறந்தநாளில் பொன்னாடைக்கு பதில் புத்தகங்களை வழங்குங்கள் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 

 
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டம் என வேண்டுகோள் விடுத்து தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், 
 
என்னுடைய பிறந்தநாளுக்கான வாழ்த்து செய்திகளை கழகத்தினர் பலரும் முன் கூட்டியே தெரிவித்து வருகிறார்கள். இளைஞர் எழுச்சி நாள் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளையும் ஆர்வத்துடன் மேற்கொண்டுள்ளனர்.
 
பிறந்தநாள் விழாக்களை ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டாமென்றும், மக்களுக்குப் பயன் தரும் வகையில் ரத்ததானம், நலத்திட்ட உதவிகள், இயற்கையைப் போற்றும் விதத்தில் மரக்கன்று நடுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென்று கழகத் தோழர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வேண்டுகோள் விடுத்து வருகிறேன்.
 
அத்துடன் பேனர்கள், கட்-அவுட்டுகள் போன்ற பொது மக்களுக்கு அதிருப்தி ஊட்டும் பிறந்த நாள் அலங்கார ஆடம்பரங்களைக் கண்டிப்பாக, கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும் என்பதையும் ஒவ்வொரு முறையும் வேண்டுகோளாக விடுத்து வருகிறேன்.
 
என்னுடைய வேண்டுகோளை அன்புக்கட்டளையாக ஏற்றுத் தவறாமல் செயல்படுத்தும் கழக உடன்பிறப்புகளின் கட்டுப்பாடே எனக்குக் கிடைக்கும் மிகச் சிறந்த பிறந்தநாள் பரிசாக கருதுகிறேன். அன்புமிகுதியாலும் ஆர்வத்தாலும் ஒரு சில தொண்டர்கள் ஆடம்பர விழாக்களை முன்னெடுப்பதும் உண்டு. அவற்றையும் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
 
காலில் விழுவதைத் தவிர்த்து கம்பீரமான வணக்கம் செலுத்தி சுயமரியாதை காப்போம் என்ற என்னுடைய வேண்டுகோளை கழகத்தினர் கடைப்பிடித்து வருவது மகிழ்ச்சி தருகிறது. அதுபோலவே, பிறந்த நாள் விழா தொடர்பான படாடோபக் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, மக்கள் நலன் சார்ந்த விழாக்கள், கழகத்தின் கொள்கையை வெளிப்படுத்தும் கருத்தரங்கங்கள் போன்ற அறிவொளித் திருவிழாக்களை நடத்த வேண்டும் என்பதே என் வேண்டுகோளாகும்.
 
அன்பின் மிகுதியால், என் பிறந்தநாளன்று நேரில் வாழ்த்து தெரிவிக்கும் கழகத்தினர் பலரும் பொன்னாடை என்ற பெயரில் செயற்கை இழையிலான பளபளப்பு சால்வைகளைப் போர்த்துவது வழக்கமாகிவிட்டது. பகட்டான இந்தப் பழக்கத்தைத் தவிர்த்து, காலம் எல்லாம் பயனுள்ள வகையில் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கும் பழக்கத்தை மீண்டும் புதுப்பித்துப் பின் பற்றுவோம்.
 
கழகத்தினர் இல்லங்களில் நடைபெறும் திருமண விழாக்கள் தொடங்கி பலவற்றிலும் புத்தகங்களைப் பரிசளித்து, படிக்கும் பழக்கத்தை சமுதாயத்தில் பரவலாக்கிப் பெருக்கிய பெருமை தி.மு.கழகத்திற்கு உண்டு.
 
என் அன்பு வேண்டுகோளை எப்போதும் ஏற்று கண்டிப்பாக கடைப்பிடிக்கும் கழகத்தினர் இந்த வேண்டுகோளையும் ஏற்று, சால்வைபொன்னாடை போன்ற பகட்டான பரிசுகளைத் தவிர்த்து, மார்ச் 1 ஆம் தேதி இளைஞர் எழுச்சி நாள் முதல் தொடர்ந்து நல்ல புத்தகங்களை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். 
 
இவ்வாறு அந்த் கடிதத்தில் எழுதியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்