எந்த அரசியல் கட்சி தலைவரும் அப்பாவி மக்கள் இறப்பதை விரும்ப மாட்டார்கள்.. முதல்வர் ஸ்டாலின்

Mahendran

திங்கள், 29 செப்டம்பர் 2025 (14:00 IST)
கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் சற்றுமுன் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
 
கரூரில் நடந்தது பெருந்துயரம், கொடுந்துயரம். இதுவரை நடக்காத துயரம், இனி நடக்கக் கூடாத துயரம். மருத்துவமனைக்கு நான் நேரில் சென்று பார்த்த காட்சிகள், இன்னும் என் கண்ணைவிட்டு அகலவில்லை. கனத்த மனநிலையிலும் துயரத்திலும்தான் இன்னும் இருக்கிறேன்.
 
செய்தி கிடைத்தவுடன் மாவட்ட நிர்வாகத்தை முடுக்கிவிட்டு அனைத்து உத்தரவுகளையும் பிறப்பித்த பிறகும் என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. அன்றிரவே கரூர் சென்றேன். குழந்தைகள், பெண்கள் என 41 உயிர்களை நாம் இழந்துள்ளோம். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
 
நடந்த சம்பவம் குறித்து முழுமையான உண்மையான காரணத்தை அறிய ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அறிக்கை அடிப்படையில் அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும் என உறுதியளிக்கிறேன்.
 
இதனிடையே சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகளைப் பார்த்து வருகிறேன். எந்த அரசியல் கட்சித் தலைவரும் தொண்டர்கள், அப்பாவி மக்கள் இறப்பதை விரும்ப மாட்டார்கள். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், என்னைப் பொருத்தவரை அவர்கள் தமிழ் உறவுகள். சோகமும் துயரமும் சூழ்ந்திருக்கும் சூழலில், பொறுப்பற்ற விஷமத்தனமான கருத்துகளைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
 
கட்சிகள், பொது அமைப்புகள் இதுபோன்ற கூட்டங்களை வருங்காலங்களில் நடத்த வேண்டுமென்றால், அதற்கான விதிகளை வகுக்க வேண்டியது நமது கடமை. நீதிபதியின் அறிக்கை கிடைத்தவுடன் அனைத்து கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தி, இதற்கான விதிகள், நெறிமுறைகள் வகுக்கப்படும்.
 
மனித உயிர்களே எல்லாத்துக்கும் மேலானது, மானுட பற்றே அனைவருக்கும் வேண்டியது. அரசியல் நிலைப்பாடுகள், கொள்கை வேறுபாடுகள், தனிமனித பகைகள் என அனைத்தையும் விலக்கி வைத்துவிட்டு, அனைவரும் மக்களின் நலனுக்காக சிந்திக்க வேண்டும். தமிழ்நாடு எப்போதும் நாட்டுக்கு முன்னோடியாகத்தான் இருந்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் வருங்காலங்களில் நடக்காமல் தடுப்பது அனைவரின் கடமை” 
 
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்