நாடாளுமன்ற தேர்தலில் திமுக தோற்றால் கட்சி சின்னாபின்னமாகிவிடும் என்று மு.க.அழகிரி கூறியுள்ளார்.
மு.க.அழகிரி மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சமாதிக்கு தனது குடும்பத்தினருடன் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, தனது ஆதங்கம் பற்றி இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கூறுகிறேன் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதன்பிறகு ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மு.க.அழகிரி, நாடாளுமன்ற தேர்தலில் திமுக தோற்றால் கட்சி சின்னாபின்னமாகிவிடும் என்று கூறியுள்ளார்.
ரஜினியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், ரஜினியுடன் திமுக கூட்டணி வைத்துக்கொள்ள அழகிரி விரும்புவதாகவும் காலை முதல் தகவல்கள் பரவியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்னும் 6 மாதத்தில் தேர்தல் வரவுள்ளது. ரஜினியிடம் ஏற்கனவே நிறைய பேர் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கின்றனர் என்று சூசகமாக, திமுக ரஜினியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை கூறியுள்ளார்.