திம்பம், கடம்பூரில் கடும் மூடுபனி - போக்குவரத்து பாதிப்பு

திங்கள், 13 அக்டோபர் 2014 (16:14 IST)
ஈரோடு மாவட்டம் திம்பம், கடம்பூர் மலைப் பாதைகளில் கடந்த இரண்டு நாட்களாக கடும் பனிமூட்டம் ஏற்பட்டு வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

 
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ளது திம்பம் மலைப் பகுதி. இது, குட்டி கொடைக்கானல் என அழைக்கப்படுவது உண்டு. இந்த மலைப் பகுதி, கடல் மட்டத்தில் இருந்து 1105 மீட்டர் உயரம் கொண்ட பகுதியாகும். இந்த வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களின் இணைப்புச் சாலையாக விளங்குகிறது.

 
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகத் திம்பம் மலைப் பாதையில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாகக் கடந்த இரண்டு நாட்களாகத் திம்பம் மலைப் பாதையில் கடும் மூடுபனி நிலவி வருகிறது. மொத்தம் 27 கொண்டை ஊசி வளைவுகளில் 20ஆவது கொண்டை ஊசி வளைவுக்கு மேல் மூடுபனி தொடங்கி விடுகிறது. பின் திம்பம் அடுத்து ஆசனூர் பள்ளம் வரை நீடிக்கிறது.

 
இந்தத் தொடர் மூடுபனியால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பேருந்துகள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன. முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு பேருந்துகள் செல்கின்றன.சில இடங்களில் முற்றிலும் வழி தெரியாத காரணத்தால் சில நிமிடங்கள் வாகனத்தை நிறுத்தி, அதன்பின் பனி மூட்டம் கலைந்த பின் வாகனத்தை இயக்குகின்றனர்.
 
இதேபோல் கடம்பூர் மலைப் பகுதியிலும் கடும் மூடுபனி ஏற்பட்டுள்ளதால் இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்