பதவியேற்பு விழாவில் அமைச்சரால் குழப்பம்: ரசித்தபடியே சிரித்த கவர்னர்!

வியாழன், 16 பிப்ரவரி 2017 (17:34 IST)
தமிழகத்தின் 13-வது முதல்வராக எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் மாலை 4.30 மணிக்கு நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் 31 அமைச்சர்கள் பதவியேற்றனர்.


 
 
முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை அடுத்து பெரும் அரசியல் பரபரப்புக்கு பின்னர் இன்று மாலை 4.30 மணியளவில் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது.
 
முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற பின்னர் மூன்று குழுக்களாக 31 அமைச்சர்கள் பதவியேற்றனர். அப்போது முதலில் வந்த குழுவை பதவியேற்க வைக்க ஆளுநர் ‘நான்’ என தொடங்கி வைத்தார்.
 
உடனே முதலில் நின்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல் சீனிவாசன் என்னும் நான் என தொடங்கி மற்ற அமைச்சர்கள் தங்கள் பெயரை சொல்லும் முன்னர் தனது பதவி பிரமானத்தின் மற்ற வரிகளை சொல்ல ஆரம்பித்தார். இதனால் மற்ற அமைச்சர்களிடையே குழப்பம் நிலவியது.
 
உடனே அருகில் நின்ற அமைச்சர் செங்கோட்டையன் அவரை தடுத்தார். பின்னர் அனைவரும் முதலில் இருந்து ஆரம்பித்தனர். இதனை ஆளுநர் வித்யாசாகர் ராவ் சிரித்தபடியே ரசித்து பார்த்தார். மேலும் பதவியேற்பு விழாவிலும் சிறைக்கு சென்றுள்ள சசிகலாவை சின்னம்மா வாழ்க என கோஷமிட்டார்கள் அதிமுகவினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்