நீட் தேர்வு ரிசல்ட் காரணமாக பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் கலந்தாய்வு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் படிக்க விண்ணப்பித்தோர் கலந்தாய்வு முறையில் விருப்பமான கல்லூரிகளை தேர்ந்தெடுப்பது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டில் பொறியியல் படிப்புகளில் சேர சுமார் 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்
ஆகஸ்டு 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு 25ம் தேதி முதல் தொடங்கும் என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் 25ம் தேதி நடைபெற இருந்த பொறியியல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக தற்போது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். நீட் தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருப்பதால் ஒத்திவைக்கப்படுவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் செப்டம்பர் 7ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளதால் செப்டம்பர் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தற்போது அறிவித்துள்ளார்.