தரம்தாழ்ந்த நிலைக்கு செல்லும் திமுக : பதிலடி கொடுக்கும் ஜெயகுமார்!

வியாழன், 10 டிசம்பர் 2020 (13:12 IST)
தரம்தாழ்ந்த நிலைக்கு திமுக சென்று கொண்டிருப்பதாகவும், அதிமுகவை சீண்டினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
 
நாகப்பட்டினத்தில் உள்ள ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில், 5% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெற்ற மீனவர்களின் வாரிசுகளுக்கு சேர்க்கை உறுதி செய்யப்பட்டதற்கான சான்றிதழை சென்னை தலைமை செயலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார்.
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்..முதல்வர் தொடர்பாக ஆ.ராசா கருத்திற்கு..ராசா என்ன ஐநா சபையா சான்றிதழ் அளிக்க? என்றும் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும்,விளம்பரத்திற்காக மட்டுமே அவர் பேசி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
 
மேலும், திமுக தமிழ்நாட்டிற்கு எட்டாக்கனி மட்டுமே என்று கூறிய அவர், திமுக ஆட்சி ஒரு கானல் நீர் தான் என்றும், மக்கள் அனைத்தையும் உணர்ந்துள்ளதாகவும், 100% மதிப்பெண்ணை பெற்ற ஆட்சி அதிமுக தான், திமுக 35%க்கும் குறைவாக தான் உள்ளதாகவும், 2021ல் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்றும் கூறினார்.
 
தொடர்ந்து பேசிய அவர், வழக்கறிஞர் ஜோதியுடன் விவாதிக்க ஆ. ராசா தயாரா? என கேள்வி எழுப்பிய அவர், ராசாவின் தகுதிக்கு முதல்வருடன் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், வரும் திங்கட் கிழமை என் சொந்த செலவில் ஏற்பாடு செய்கிறேன், 
 
வழக்கறிஞர் ஜோதியுடன் விவாதம் செய்ய ராசா வருவாரா எனவும் அவர் கேள்வி எழுப்பினார். ஜெயலலிதா மரண விவகாரத்தில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தனது கடமையை சரிவர செய்யும் என கூறிய அவர், உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என்பதே அரசின் எண்ணம் என்றும், நோக்கம் நிச்சயம் நிறைவேறும் எனவும் அவர் கூறினார்.
 
TNPSC தேர்வுகள் எப்போது?என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நிலுவையில் இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள், பணி நியமன கலந்தாய்வு போன்றவை படிப்படியாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், கல்லூரிகளும் திறக்கப்பட்டிருக்கின்றன என்றும், பொதுப்போக்குவரத்தும் தொடங்கியிருக்கிறது எனவும், விரைவில் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை TNPSC முன்னெடுக்கும், விரைவில் உரிய அறிவிப்பு வெளியாகும் என அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்